ஜானகி பெரியம்மா ஒரு சகாப்தம்
அன்பெனும் உணர்வின் இலக்கணமாய்
பெறுதலின் தருதலே இன்பமாய்
உறவுகளுக்கப்பாற்பட்ட நேயத்தின் சின்னமாய்
சகிப்பின் பொறுமையின் முழுவுருவாய்
வாழ்ந்து சென்றாய் நீ, என்செய்வோம் இனி நாங்கள்
சொல்லொணா அடைமொழிகள் நற்குணங்களாய்
வாழ்வின் வலிதாங்குதலில் முனைவர் பட்டத்தோடு
பிறர்வலி தீர்த்தல் பிறந்த பயனாய்
எம்மைப் பற்றி ஏகமாய் கவலைப் பட்டன்றோ
வாழ்ந்து சென்றாய் நீ, என்செய்வோம் இனி நாங்கள்
நடைமுறை இன்பத்திற்கு பஞ்சமாய் வாழ்வமைந்தும்
பிறரின்பம் தமதாக்கிய தனித்தன்மைக்குப் பஞ்சமில்லை
தம்பியோ தமக்கையோ மைத்துனனோ எவர்மகவும்
பாசமாய் தன்னிச்சையாய் தேடிவந்தது உன்பெருமையாய்
வாழ்ந்து சென்றாய் நீ, என்செய்வோம் இனி நாங்கள்
மங்கையாய் கணவனை மணந்து பட்டாய்
மடந்தையாய்க் கணவனை இழந்து பட்டாய்
பேரிளம்பெண்ணாய் கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்துபட்டாய்
முதிர்மாதாய் படுக்கையில் பலவலிகள் அனுபவித்து
வாழ்ந்து சென்றாய் நீ, என்செய்வோம் இனி நாங்கள்
இறுமாப்பில்லை இன்சொற்கள் மட்டும்
உதாசீனமில்லை அரவணைப்பு மட்டுமாய்
உரிமைகேட்டலின்றி அளித்தல் மட்டுமாய்
உண்மைகள் எதுவாயினும் உறவொன்றே முக்கியமாய்
வாழ்ந்து சென்றாய் நீ, என்செய்வோம் இனி நாங்கள்
அம்மாவாய் அக்காவாய் தங்கையாய் மதினியாய்
பாட்டியாய் பக்கத்து வீட்டினளாய் எத்தனை உறவுகளில்
உடலுழைப்பால் அறிவுறுத்தலால் அமைதிசேர்த்தலால்
உன்னால் ஒளிவீச முடிந்தது; உதாரணமாய் இருந்து
வாழ்ந்து சென்றாய் நீ, என்செய்வோம் இனி நாங்கள்
தங்கம் முதல்தேவையென்று வாழும்பல பெண்களிடை
தன்மைதான் தரமென்று வாழ்ந்துவிட்ட நீ எங்கே!
சிற்றின்பம் கிடைக்காமலே சினமுறும் மனிதரிடை
பேரின்பம் பெறுவதற்காய் பாடநூல் வாழ்க்கையுனது
வாழ்ந்து சென்றாய் நீ, என்செய்வோம் இனி நாங்கள்
பெருமை தேடிப்பலர் செய்யும் செய்கைகள்
பெற்றுத் தருவது சிறுமையும் கேலியும்தான்
இதுவுனக்குத் தெரிந்தேதான் பாசம்மட்டும் தேடி
நீ செய்தவை தேடித்தந்த பெருமையோடு
வாழ்ந்து சென்றாய் நீ, என்செய்வோம் இனி நாங்கள்
பிறர் புண்படாதிருக்க நீ சொல்லா உண்மையெத்தனை
சுற்றம் நன்றாய் வாழ்ந்திட நீயிழந்தது எத்தனை
வலியோடு படுத்தபோதும் “வார்டுபாய்”க்கு பணம்தந்து
பேரக்குழந்தைகளின் வளர்ச்சியால் ஆனந்தம்பெற்று
வாழ்ந்து சென்றாய் நீ, என்செய்வோம் இனி நாங்கள்
வயதாகி வேடிக்கை மனிதராய் வீழ்வது இயற்கைதான்
ஆயின் உறவுகளுக்கு இழப்பை ஏற்பது கடினமன்றோ
வலிகளினின்றும் உனக்கு விடுதலை எமக்கு மகிழ்ச்சிதான்
கண்ணீரும் வேதனையும் தாங்கவில்லை உன்பிரிவால்
வாழ்ந்து சென்றாய் நீ, என்செய்வோம் இனி நாங்கள்
உன்போல் மங்கையராய் பிறப்பதற்கே நல்லமாதவம்
செய்தலும் உன்நினைவுகளை வாழ்வித்தலும் அவசியம்
வாழ்வில் உணர்வுகளைவிட உன்னதம் முக்கியமாய்
தாக்குதலின் தாங்குதல் மேன்மையாய் படிப்பினையாய்
வாழ்ந்து சென்றாய் நீ, என்செய்வோம் இனி நாங்கள்