Friday, December 25, 2015

காக்கா முட்டை

பள்ளிக்குச் செல்லமுடியாப் பேதைகள் ரயில்பாதையில்
தினம் பொறுக்கும் திருட்டுக் கரி...
விற்றால் தான் சோறே...கறியை விடுங்கள்!

மேலே பாலத்தில் காரில் பைக்கில் செல்லும்
மேட்டுக்குடி மூக்கைப் பொத்தும் சாக்கடையே
இவர்களின் தாய்மடியாம் கூவம் ஆறு!
ஒருவேளைக் கஞ்சிக்கு லோட்டா தட்டும்
கும்பலுக்கு அருகில் கட்டுகிறான் பிட்சாகடையை

சிறையில் வாழும் தகப்பன்; வேலைச் சிறையில்
வதங்கும் தாயின் வேதனை
மருமகள் பாதுகாப்பில் மாமியார் அவளது பாதுகாப்பாய்
இவர்க்கிடையே `அப்பாகூட வேண்டாம்...,
பிட்சா வேண்டும்` எனும் சிறுவர்கள்

ஆசை யாரை விட்டது...
வாழ்க்கையின் உந்து சக்தியன்றோ...!
எனக்குச் சிறியதாயிருப்பது இச்சிறுவர்களுக்கு
இமாலயமாய் இருக்கிறது.

ஆசையாய் பாட்டி சுட்ட தோசை பிட்சாவுக்கு ஈடில்லை
அதில் நூல்நூலாய் வரவில்லை`யென்று
காறித்துப்புகிறான் சிறுவன்
`கெட்டுப்போனாத் தாண்டா அப்படி வரும்`
சப்பைக்கட்டு கட்டும் பாட்டியைத் தள்ளிவிட்டு
ஒடும் இச்சிறுவர்கள்.. வாழ்வின் இயல்பு

`யோவ், ஒரு குவார்ட்டர் எடுத்ததுக்கு எவ்வளவுய்யா
அடிப்பே` எனப் பாவக்கணக்குப் போடும் திருடர் கூட்டம்
பிட்சா வாங்க வந்தவனை `குப்பத்துப் பையன்` என
விரட்டும் காவலாளி... அவனும் `டூட்டி` முடிந்து
திரும்பப் போவது `குப்பத்து` வீட்டுக்குத்தான்.

ஆடைக்கும் காசுக்கும் இருக்கும் மதிப்பு
மனிதத்துக்கு இருந்தால்...!

வாழ்க்கை வாழத்தான்...
மேட்டிலும் இனிக்கும் பள்ளத்திலும் அது சாத்தியமே
அனுபவம் தானே வாழ்க்கை!

தேவைக்கும் ஆசைக்கும் வித்தியாசம் தெரியா
இச்சிறுவர்கள் அவதிப்படுகிறார்கள்...
சிறுவர்கள் மட்டுமா...!

மேல்தட்டு நண்பன் வேலிவழி தரும் பிட்சாவை
ஏற்க மறுக்கும் தன்மானம்
இச்சிறுவர்களை மேன்மக்களாக்குகிறது!

திருட்டுக்கரி கிடைக்காமல் திருடவும் முடியாமல்
`மட்டையாகிக் கிடக்கும் குடிமகர்களுக்கு
போக்குவரத்து வசதி செய்யும் சிறுவர்கள்
உடனடித் தொழிலதிபர்களாகிறார்கள்!

தெருநாய்க் குட்டிக்கு `இருபத்தையாயிரம்` விலை.
விலைபோகாமல் மறுபடி தொழிலாளியாவதில்
தயக்கம் ஒன்றும் தெரியவில்லை...
ஆசை யாரை விட்டது... அதுவும் பிட்சா ஆசை!

பிட்சா கடை கண்ணாடி காட்டும்
ஒவ்வொரு `பிட்சா துண்ணும்` காட்சியும்
இவர்களை சேர்த்த பணத்தை எண்ண வைக்கிறது
ஆசையை ஆழப்படுத்துகிறது... இல்லையில்லை
உசுப்பேற்றி விடுகிறது... இலட்சியத்தை நோக்கி முன்னேறும்
இந்தப் பரட்டைத்தலை வீரர்களை!

பள்ளியும் பணமும் தரவியலாத கல்வியை
வாழ்க்கையின் இல்லாமை அள்ளித்தருகிறது
பேதைமக்களின் தேவைகளை வைத்து
பேமானிகள் செய்யும் அரசியல்...
வியாபாரிகளின் இரக்கமின்மை
இறுதியாய் எல்லாவற்றுக்கும் `தீர்வா`வது
மனிதநேயமே எனும் யதார்த்தம்.

மேல்தட்டு அடித்தட்டென வித்தியாசமில்லாது
நெஞ்சையள்ளும் அம்மாக்களின் அரவணைப்பு
பாட்டிகளின் அன்புச்சிறை, அற்புதமாய்
குழந்தைகளின் பேதமில்லா அன்பு,
`பழரச`மென்னும் அன்பர் ...
நெஞ்சைத் தைக்கிறார்கள்

மொத்தத்தில் `காக்கா முட்டை`
இயல்பு அளவைப்போல சிறியதல்ல
உணர்விலும் மனிதநேயம் சொல்வதிலும்
`டைனோசார்` முட்டை!