உணர்வுகளின் ஓசை!
விலங்குகளிலிருந்து மனிதர்களை வித்தியாசப்படுத்துவது உணர்வுகளும் அவற்றை மனிதன் கையாளும் விதமும். இந்த வலைப்பதிவின் ஒரே நோக்கம், அவ்வுணர்வுகளை அழகான ஓசையாக்கி வெளிப்படுத்துவதுதான்...
Wednesday, January 25, 2017
குடியரசுதின நல்வாழ்த்துக்கள்!!
Thursday, March 24, 2016
அது...
இறையைத் தேடி இதயம் செய்யும் இணைப்புப் பாதை ஆன்மீகம்
இரையைத் தேடி இதயம் தொலைக்கும் இன்னல் வியாபாரம்
நன்மை தேடிக் கடுமையிலும் கனிவுதெறிப்பது தாய்மை
காண்பதுவெல்லாம் கானலாயினும் கனவில் மிதப்பது காதல்
Sunday, February 14, 2016
கருணை...
கடவுள் தந்த முதல்விதை கருணை
படைத்தல் அழித்தல் சக்கரம் சுழல
காத்தல் கடவுளின் கருணையே உந்துதல்
தேவைதீர்த்தல் தினப்பொருள் ஈட்டல்
இதுவே வாழ்வென இருக்கும் மனிதரில்
எஞ்சிய கருணை இடர்வரத் தெரியும்
இதுவும் இயல்பின் இன்றியமையா அங்கம்தான்
மகவும் மனையும் மனநிறை தந்தால்
அன்பும் அறமும் அகமிடை நிறைந்தால்
ஆசையும் பாசமும் அறவே ஒழிந்தால்
நேசமும் நேர்மையும் உலகிடை மிளிர்ந்தால்
இயற்கையின் இயல்பை நாமுணர்ந்து தெளிந்தால்
அதைவிடக் கருணை வேறென்ன வேண்டும்
தந்திடும் அய்யா! எமக்கு மட்டுமன்று...
உமக்குமது நன்றே...!
Thursday, December 31, 2015
வேண்டுவதும் வேண்டாததும்…
வந்தது புத்தாண்டு எழுந்தது கேள்வி
எது வேண்டும் எது வேண்டாம்…?
எது குறை எது நிறையென்று
விளங்காத நிலை வேண்டாம்
எது மிகை எதுவில்லையினும்
சமநிலை தெரியும் திறன் வேண்டும்
வாட்டமில்லா நிலை வேண்டாம்,
எளிதில் மீண்டுவரும் முறையும் திறனும் வேண்டும்
பிழையில்லா நிலை வேண்டாம்
அதனின்று பிழைத்து வரும் மனம் வேண்டும்
அதைப்போக்க மேலும் பிழைசெய்யும் குணம்வேண்டும்
விழல் வேண்டாம் எதிலும்
நிழல் வேண்டும் மனதில் வலிவந்தால்
செயலில் சுயம் வேண்டும் நலம் வேண்டும்
சிறிதும் சுயநலம் வேண்டவே வேண்டாம்
அன்பில் பண்பில் மிகைவேண்டும்
கோபம் சீற்றம் நிலையில் மிகவேண்டாம்
அறிதல் மிகைவேண்டாம் புரிதல் மிகவேண்டும்
பாழாய்ப்போன ஆசை மிகை வேண்டாம்
பதமாய் அதனை ஆள்வது மிகவேண்டும்
எதுவேண்டும் எதுவேண்டாம் என்று
அறியும் திறன் வேண்டும் இந்தப் புத்தாண்டில்
உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்
வாழ்த்துக்கள்!
g. desikamani (mani) founder & ceo M +91 95000 28611 |
மற்றுமோர் ஆண்டு, புத்தாண்டாகுமோ?
மற்றுமோர் ஆண்டு, புத்தாண்டாகுமோ?
எவ்வகையாம் எவ்வழியில்
அது முக்கியமன்றோ…
அது நம்கையில் அன்றோ…
வாழ்த்துக்கள்!
Friday, December 25, 2015
காக்கா முட்டை
தினம் பொறுக்கும் திருட்டுக் கரி...
விற்றால் தான் சோறே...கறியை விடுங்கள்!
மேலே பாலத்தில் காரில் பைக்கில் செல்லும்
மேட்டுக்குடி மூக்கைப் பொத்தும் சாக்கடையே
இவர்களின் தாய்மடியாம் கூவம் ஆறு!
ஒருவேளைக் கஞ்சிக்கு லோட்டா தட்டும்
கும்பலுக்கு அருகில் கட்டுகிறான் பிட்சாகடையை
சிறையில் வாழும் தகப்பன்; வேலைச் சிறையில்
வதங்கும் தாயின் வேதனை
மருமகள் பாதுகாப்பில் மாமியார் அவளது பாதுகாப்பாய்
இவர்க்கிடையே `அப்பாகூட வேண்டாம்...,
பிட்சா வேண்டும்` எனும் சிறுவர்கள்
ஆசை யாரை விட்டது...
வாழ்க்கையின் உந்து சக்தியன்றோ...!
எனக்குச் சிறியதாயிருப்பது இச்சிறுவர்களுக்கு
இமாலயமாய் இருக்கிறது.
ஆசையாய் பாட்டி சுட்ட தோசை பிட்சாவுக்கு ஈடில்லை
அதில் நூல்நூலாய் வரவில்லை`யென்று
காறித்துப்புகிறான் சிறுவன்
`கெட்டுப்போனாத் தாண்டா அப்படி வரும்`
சப்பைக்கட்டு கட்டும் பாட்டியைத் தள்ளிவிட்டு
ஒடும் இச்சிறுவர்கள்.. வாழ்வின் இயல்பு
`யோவ், ஒரு குவார்ட்டர் எடுத்ததுக்கு எவ்வளவுய்யா
அடிப்பே` எனப் பாவக்கணக்குப் போடும் திருடர் கூட்டம்
பிட்சா வாங்க வந்தவனை `குப்பத்துப் பையன்` என
விரட்டும் காவலாளி... அவனும் `டூட்டி` முடிந்து
திரும்பப் போவது `குப்பத்து` வீட்டுக்குத்தான்.
ஆடைக்கும் காசுக்கும் இருக்கும் மதிப்பு
மனிதத்துக்கு இருந்தால்...!
வாழ்க்கை வாழத்தான்...
மேட்டிலும் இனிக்கும் பள்ளத்திலும் அது சாத்தியமே
அனுபவம் தானே வாழ்க்கை!
தேவைக்கும் ஆசைக்கும் வித்தியாசம் தெரியா
இச்சிறுவர்கள் அவதிப்படுகிறார்கள்...
சிறுவர்கள் மட்டுமா...!
மேல்தட்டு நண்பன் வேலிவழி தரும் பிட்சாவை
ஏற்க மறுக்கும் தன்மானம்
இச்சிறுவர்களை மேன்மக்களாக்குகிறது!
திருட்டுக்கரி கிடைக்காமல் திருடவும் முடியாமல்
`மட்டையாகிக் கிடக்கும் குடிமகர்களுக்கு
போக்குவரத்து வசதி செய்யும் சிறுவர்கள்
உடனடித் தொழிலதிபர்களாகிறார்கள்!
தெருநாய்க் குட்டிக்கு `இருபத்தையாயிரம்` விலை.
விலைபோகாமல் மறுபடி தொழிலாளியாவதில்
தயக்கம் ஒன்றும் தெரியவில்லை...
ஆசை யாரை விட்டது... அதுவும் பிட்சா ஆசை!
பிட்சா கடை கண்ணாடி காட்டும்
ஒவ்வொரு `பிட்சா துண்ணும்` காட்சியும்
இவர்களை சேர்த்த பணத்தை எண்ண வைக்கிறது
ஆசையை ஆழப்படுத்துகிறது... இல்லையில்லை
உசுப்பேற்றி விடுகிறது... இலட்சியத்தை நோக்கி முன்னேறும்
இந்தப் பரட்டைத்தலை வீரர்களை!
பள்ளியும் பணமும் தரவியலாத கல்வியை
வாழ்க்கையின் இல்லாமை அள்ளித்தருகிறது
பேதைமக்களின் தேவைகளை வைத்து
பேமானிகள் செய்யும் அரசியல்...
வியாபாரிகளின் இரக்கமின்மை
இறுதியாய் எல்லாவற்றுக்கும் `தீர்வா`வது
மனிதநேயமே எனும் யதார்த்தம்.
மேல்தட்டு அடித்தட்டென வித்தியாசமில்லாது
நெஞ்சையள்ளும் அம்மாக்களின் அரவணைப்பு
பாட்டிகளின் அன்புச்சிறை, அற்புதமாய்
குழந்தைகளின் பேதமில்லா அன்பு,
`பழரச`மென்னும் அன்பர் ...
நெஞ்சைத் தைக்கிறார்கள்
மொத்தத்தில் `காக்கா முட்டை`
இயல்பு அளவைப்போல சிறியதல்ல
உணர்விலும் மனிதநேயம் சொல்வதிலும்
`டைனோசார்` முட்டை!
Friday, December 4, 2015
சிறுகதை: ஐ லவ் யூ, மேடம்…!
ஏதும் இல்லாதது போல் உணர்வு ஏனோ!
ஏதும் இல்லாதபோது எல்லாம்
இருந்ததைப் போன்ற உணர்வால் வியந்திருக்கிறேன்.
ஏனென்று புரிந்ததில்லை, இன்றும் புரிவதில்லை
நிஜமென்றால், உணர்வுதான் வாழ்க்கையா!
Friday, November 20, 2015
கட்டுரை: காலத்தின் சமிக்ஞை
"இந்த நக்கல் தானே வாணாங்கறது" ஒரு சம்பிரதாயமான அவையடக்கம் இருந்தாலும், அடுத்த சான்ஸ் கிடைத்தவுடனே வயிற்றை பெருமையாகத் தடவி விட்டுக்கொண்ட மனுஷத்தனம் போகலையே.
"ஷுகருக்குபதிலா ஹனி, ஒருமணி நேரத்துக்குமேல பாட்மிண்டன், ஜெனரலா சாப்பாடு குறைச்சா எல்லாம் சரியாயிடும். நீங்களும் ட்ரைபண்ணலாம்" என்ற இறுமாப்பு. காலம் நாலுநாள் முன்னால சாயங்காலம் எல்லாத்துக்கும் வைத்தது ஆப்பு!
லேசான நெஞ்செரிச்சல் இருந்தது. மதியம் சாப்பிட வீட்டில் நுழைந்தவனுக்கு ஏதோ நெருடலாகவே இருந்தது. 'ஏவ்...' என்று ஏப்பம் விட்டுக் கொண்டே இருந்தேன். சிலசமயம் சத்தமாக ஏப்பம் விடுவதில் ஒரு சுகம். ஆனால் அதையும் மீறி ஏதோ ஒரு வலி... நெஞ்சிலேயா, தோளிலேயா என்று இனம் காண முடியவில்லை. 'சரியாப் போயிடும்' என முணுமுணுத்துக் கொண்டே அதை மறந்துபோனேன்.
ஒருமணி கழித்து ஆபீஸ் போவதற்காக கீழே இறங்கும்போதும் வலி தொடர்ந்தது. என்றனாவியுள் புகுந்த இயற்கை சொன்னது, " என்னன்னு பார்த்துடப்பா!" சுமித்ராவைக் கூட அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரி போனால் அவர்களது இசிஜி மிஷின் தகராறு செய்தது. ஒருவழியாய் பார்த்து முடித்தால், ஒன்றுமில்லை என்றார்கள். மனது நம்ப மறுத்தது!
சாயங்காலம் டாக்டர் சுவாமிநாதனைப் பார்த்தபோது, அவர் என்னை சந்தேகாஸ்பதமாய்ப் பார்த்தார். "ஒண்ணும் வித்தியாசமாய்த் தெரியலையே, வேணும்னா இன்னோரு இசிஜி எடுத்துடுங்கோ. பக்கத்து லாப் முதல்மாடில இருக்கு. வேகமா ஓடி படியேறி போங்கோ. பார்க்கலாம்" என்றார். ரிப்போர்ட்டைப் பார்த்து உதட்டைப் பிதுக்கினார். " போய் ரெஸ்ட் எடுங்கோ சார். பத்துநாள் கழித்து ஒரு ட்ரெட்மில் எடுத்துப்பார்த்துடலாம்" என்றுவிட்டு கிளம்பறயா என்பதுபோல் லுக் விட்டார்.
எனக்கென்னமோ உள்ளே ஒரு நெருடல். "ஸார், தப்பா நெனச்சுக்காதீங்க. ஆனா அந்த வலி ஏன் வந்ததுன்னு தெரிஞ்சுக்கலைன்னா தூக்கம் வராதே. என்ன பண்ணலாம்!" என்று இழுத்தேன். என்னமாதிரி ஜந்துப்பா நீ என ஒரு பார்வை பார்த்துவிட்டு, " நேர போய் பாலாஜி ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆய்டுங்கோ. ஒருநாள் ஐ.சி.யூ ல வச்சு பார்த்துடலாம். சந்தேகம் தீர்ந்துடும்"
என்றார்.
ஒரு நாள் முழுவதும் அங்கே இருந்தாயிற்று. இரண்டு நாவல்கள் முடிந்தது. குறைந்த பட்சம் பத்து கதைகளுக்கான கரு கிடைத்தது அங்கே இருந்தவர்களை அப்ஸர்வ் பண்ணியதில். நம்ம சமாசாரம் தான் ஒண்ணும் தெளிவாகலை. "போதுமா? இப்போ வீட்டுக்குப் போறீங்களா" என்ற சுவாமிநாதனிடம் "ஏதாவது கன்ஃபர்மேட்டரி டெஸ்ட் இல்லையா?!" என்றேன்.
"இந்த இன்டர்நெட் வந்தப்பறம், டாக்டரை நம்பற பழக்கமே போயிடுத்து பத்தீங்களா" என அலுத்துக்கொண்டே என்னைப் பார்த்தார். "வேணும்னா, ஒரு ஆன் ஜியோக்ராம் எடுத்துடலாம்!"
"எப்ப போலாம் ?" என்று கேட்டவனை இப்போது நிஜமாகவே முறைத்தார். "சரி, நாளை காலை பண்ணிடலாம்" என சிரித்துக்கொண்டே வெளியே போனார். "சும்மா இல்லாத ஏதோ கிறுக்குத்தனம் பண்ணற மாதிரி இருக்குல்ல" என்று சுமித்ராவிடம் போனில் பேசும்போது சொல்லிவிட்டு தூங்கிவிட்டேன்.
மறுநாள் ஆபரேஷன் தியேட்டரில் ஆன் ஜியோக்ராம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டாக்டர் ஃப்ரெஷ்ஷாக நெற்றியில் விபூதிக்கீற்றுடன் குட்மார்னிங் சொன்னார். "ஹலோ டாக்டர். நான் ரெடி..." என்றவுடன் "நீர்தான் என்னமோ அம்யூஸ்மெண்ட் பார்க் போறமாதிரி தயாரா இருக்கீரே..!" என்ற நக்கலுடன் என்னை வீல்சேரில் தள்ளிக்கொண்டு சென்றார்கள்.
தொழில்நுட்பத்தின் தாக்கம் இல்லாத துறை எது. அந்தக்காலம் மாதிரி இப்போ எங்க இருக்கு என்று அலுத்துக்கொள்ளும் பெரிசுகள் எதற்கும் இதன் அருமை புரியப்போவதில்லை. இதயத்துக்குள் இருக்கும் ஏகப்பட்ட குழாய்களில் எங்கே கொழுப்பு சென்று அடைத்துக்கொண்டிருக்கிறது என்று துல்லியமாய் கண்டுபிடிக்கும் செயல்முறைக்கு ஆன்ஜியோகிராம் என்று சொல்கிறார்கள்.
கையிலோ அல்லது தொடையிலோ உள்ள ரத்தநாளத்தின் வழியாக ஒரு மெல்லிய குழாயைச் செலுத்தி, அதன்மூலம் ஒருவகையான சாயத்தை அனுப்புகிறார்கள். எக்ஸ்ரே கதிர்கள் மூலம் உள்ளே நடப்பதெல்லாம் தெரிகிறது. சாயம் ஒரு ஸ்பெஷல் சமாசாரம். அதன்வழியே கதிர்களை அனுமதிப்பதில்லை. எனவே சாயம் போகும் இடமெல்லாம் பளிச்சென்று மேப்பில் தெரியும் நதிகளைப்போல படம் தெரிகிறது. பளிச் கோடுகளின் கனத்தை வைத்து இங்கிங்கே அடைப்பிருக்கிறது என்று தெளிவாகிறது.
"பார்க்கலாமா, டாக்டர்?!" என்ற என்னைப் பார்த்து "அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை. கண்ணை மூடுங்கோ. அஞ்சு நிமிடத்தில் முடிஞ்சுடும்" என்று என் வாயை மூடிவிட்டார். கண்ணை மூடி உணர்வுகளின் மேல் ஃபோகஸ் செய்ய முற்பட்டேன். ஏதோ குத்தியதுபோல் இருந்தது, நெஞ்சில் ஒரு மிதமான சூடு பரவியதுபோல் இருந்தது. "ஆச்சு, முடிந்தது. பத்துநிமிடத்தில் ரிசல்ட் தெரிஞ்சுடும். வெயிட் பண்ணுங்கோ...!" என்று வெளியே தள்ளி விட்டனர்.
ஶ்ரீராம் சிரித்துக்கொண்டே "வா ஆபீஸர். அடைப்பிருக்கான்னு இப்போ தெரிஞ்சுடும்" என்று கேலி செய்தான். அவனோடு பேசிக்கொண்டிருக்கையில், டாக்டர் வந்தார். "ப்ரொசீஜர் சக்ஸஸ்ஃபுல்லா இருந்தது. ரிசல்ட்தான் சரியில்லை, ஒரு ப்ளாக் இருக்கு மெயின் ஆர்டரியில. அதிகமில்லை 90% தான். நீ சொன்னது சரியாப்போச்சுய்யா. நல்லவேளை வந்து பார்த்துட்டோம். பெருமாள் இருக்காரய்யா...!" என்றார்.
"அப்போ அடுத்தவேலையைப் பார்க்கவேண்டியதுதான். ஆன்ஜியோப்ளாஸ்டி பண்ணி ஒரு ஸ்டெண்டைப் போட்டுடவேண்டியதுதான்!" என்ற என்னை வினோதமாகப் பார்த்தனர் மருத்துவரும் செவிலியரும். "இனிமே நீ ஸ்டெண்ட்மேன்..." என்று என்னைக் கிண்டல் செய்த ஶ்ரீராமையும் சுமித்ராவையும் பார்த்து மெலிதாக மிரண்டனர். அடுத்த மூன்றாவது நாள் செய்துமுடிப்பதாய் முடிவுசெய்து அங்கிருந்து கிளம்பி ஆஸ்பத்திரி சென்றோம்.
அதன்பின்னர் சுலபமாய் வேலைகள் முடிந்து, இரண்டாவது வாரம் பேட்மிண்டன் விளையாடத் துவங்கிவிட்டேன். இந்த மருத்துவ முன்னேற்றமும், ஆயுள் மற்றும் சுகாதாரக் காப்பீடு வசதிகளும் வாழ்வை நிஜமாகவே நீளமாக்கிக் கொண்டுதான் செல்கின்றன.
ஆனால்... இதையெல்லாம் மீறி, அன்று என்னை ஆன் ஜியோகிராம் செய்யவைத்த சக்தி எது. அதுதான் காலத்தின் சமிக்ஞையோ! நமக்கெல்லாம் அதை சரியாய்ப் படிக்கத் தெரிந்திருக்கிறதா...? தெரியலையேப்பா!
சிறுகதை; பொய்
Tuesday, November 17, 2015
கவிதை: புத்தி எப்பத்தான் வருமோ...!
பூநெய் கொண்டுசேர்க்கையால் உண்டிபடைக்க உதவும் தேனீ
பானை நிறைந்து தருமே
தேனை தித்திப்பாய் தெம்புதர
ஏனை உயிரெல்லாம் எம்மில் குறைவல்ல
யானை எறும்பு எல்லாம் சமமென்று
வீணாய்ப் போன மானுடர் மனங்களில்
ஏனாய் இந்த இறைவன் விதிக்கவில்லையோ...!
காணா உருவத்தைக் கண்டதுபோல் வரையும்
நாணா மனிதனின் கற்பனையும் அவனருளே
கோணா மனங்கொண்டு தேடும் மாந்தருக்கு
வேணாம், எதுவும் வேணாம் எனும் மனந்தருவான் அவனே...!
சத்தத்தைச் சந்தையாய்ச் செய்துவிட்டு
சாகசம் செய்ததாய் உணரும் எனக்கு
பொருளை முதலென்று அனுபவித்தால் மட்டுமே
அருளை அடைவேனென்று எப்பத்தான் புரியுமோ...!
வாளால் எம்மை அறுப்பவன்மேல்
மீளாக் காதல் எங்ஙனே கொள்வேம் என
மாளா வியப்புக் கொண்ட எனக்கு
பாளாய்ப் போன புத்தி எப்பத்தான் வருமோ...!


