குடும்பத்தில் புதுவரவு எப்போதும் உற்சாகம்தான்
ஆணோ பெண்ணோ? காத்திருப்பு; எதுவாயினும் தெரிந்தவுடன் துள்ளல்
“அப்போவே சொன்னேனே” என்பதாய் டயலாக் நிறைய
சென்று பார்த்தால் சாண் உயர ரோசாப்பூக் குவியல்
திறவாதகண், பத்துமாதப் பயணத்தின் சோர்வுத்தூக்கம்
புரியாத சிறுமியின் “கண்ணே இல்லையே” சுருக் கமெண்ட்
அன்னைமுகத்தில் சோர்வை மீறிய பெருமிதம் - ஆன் டைம் டெலிவரி
தந்தைக்கு கவலையை மீறிய கீற்றுப் புன்னகை
நொடிப்பொழுதில் செய்த உறவுக்கு நீண்டகாலப் பரிசாய்க் கிடைத்த பூக்குவியலோ
பரிசா பளுவா? பதில் சொல்லும், காலம்! - இன்றைய ஸ்பெஷல் இன்பம்தான்
மூச்சாவும் ஆயும் தன்னிச்சையாய்ப் போய்த்தள்ளும் இச்சிறு பூக்குவியல்
நாளைய ஐன்ஸ்டீனோ, எவரோ! இயற்கையின் பரிணாமம் பெருவியப்பு!
வந்தநொடியில் அவன் உருவாக்கிய உறவுகள் தான் எத்தனை
மூன்று வயதுச் சிறுவன் - நேற்றுவரை பொடியன், இன்று அண்ணனாய்ப் பெருமிதம்
பத்து வயது பெரிய அக்காவுக்கு அம்மாவானது போல் உணர்வு
திடமாய் நிகழ்வுகள் தினந்தினம் நடந்தாலும் வாழ்க்கை மனதில்தானே!