Thursday, April 15, 2010

வித்தியாசம் வித்தியாசம்தான், தவறல்ல!

தினசரி வாழ்வில் நாம் பலவிதமான அனுபவங்களைச் சந்திக்கிறோம். ஒவ்வொரு முறையும் நம் உணர்வுகள் வேறுபடுவது இயற்கை! நாம் எதிர்பார்ப்பது நடந்துவிட்டால் மகிழ்ச்சி, இல்லையேல் கோபமோ வருத்தமோ ஆத்திரமோ, சமயத்திற்கு ஏற்றாற்போல். மூளையில் இரண்டு கட்டுப்பாட்டு மையங்கள் இருப்பதாய்க் கண்டுபிடித்திருக்கிறார்கள் நரம்பியல் விஞ்ஞானிகள். விரும்பிச்செயும் செயல்களைக் கட்டுப்படுத்தும் கார்டெக்ஸும் தன்னிச்சைச் செயல்களைக் கட்டுப்படுத்தும் அமிக்டலாவும் சேர்ந்து நம்மை வழி நடத்துகின்றன. ஓவ்வொரு அனுபவத்திலும் இவ்விரண்டு மையங்கள் நமக்குச் சொல்லும் வழி வெவ்வேறு தான். உண்மையை அடிப்படையாய்க்கொண்டு செயல்படும் கார்டெக்ஸ் சொல்லும் வழி எதுவும் அமிக்டலாவுக்குப் பிடிப்பதில்லை. இயற்கை நமது பாதுகாப்பைப் கருத்தில்கொண்டு அமிக்டலாவுக்குத்தான் அதிக அதிகாரம் தந்திருக்கிறது. நன்றாய் யோசித்துப் பார்த்தால் புரியும்... நாமறிந்த செய்கைகள் நன்றென்றே உணர்ந்தக்கால் பிறர்செய்கை தவறென்று தோன்றுவது இயல்பு
நன்றுணர்ந்த நன்மக்கள் உரைப்பது வித்தியாசம் வித்தியாசம் தான் தவறல்ல - ஒவ்வொரு முறையும் இதை அமிக்டலாவுக்குப் புரியவைக்க கார்டெக்ஸ் மிகவும் மெனக்கெடுகிறது. ஒவ்வொருமுறை அதற்கு வெற்றி கிடைக்கும் போதும் நம்மில் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்கிறோம்.