Monday, November 28, 2011

கவிதை; எது கடவுள்

எல்லாம் இருப்பதுபோல் ஒரு உணர்வு... அப்படித்தான் தோன்றுகிறது.!
அது மாயைதானோ என்பதுபோல அவ்வப்போது
வயிற்றைப் பிசையும் வலி ஏனென்று புரிவதில்லை!
எல்லாம் இருக்கிறது என்பதன் அர்த்தம்தான் என்ன
நாளுக்கு மூன்றல்லது நான்குமுறை உணவு கிடைப்பதா
ஒன்றுக்கு இரண்டாய் இருப்பிடம் சொந்தமானதா
மிகப்பெரிதல்லாத மற்றெல்லாத் தேவைகளும் நினைத்தவுடன் வயமாகும் சக்தியிருப்பதா
இவையெல்லாம் பெரிதாய் என்ன தந்துவிட முடியும் - பாதுகாப்பைத்தவிர!
பரிவான சுற்றம் முத்தினும் மணியினும் மேலான மக்கள்
பெருமளவில் நம்மைத்தெரிந்தோர் தரும் மரியாதை, அன்பு
பிணியில்லா நிலை, நமக்குப்பிடித்த பணி, செய்வனவும் நன்றேயாய்
இவையெல்லாமும் பெரிதாய் என்ன தந்துவிட முடியும் - தற்காலிக மனநிறைவைத்தவிர!
உணர்வுகள் தானே வாழ்க்கை... அவை எங்கிருந்து வருகின்றன?
என்றனாவியுள் புகுந்தது எம்கொலோ எம் ஈசனே என்கிறாரே ஆழ்வார் - இதைத்தானோ!
நம் எதிர்பார்ப்புக்கள் உண்மையாவதிலோ அல்லது பொய்ப்பதிலே தான்
உணர்வுகளின் ஊற்றிருக்கின்றதோ... எனில் எதிர்பார்ப்புக்கள் எங்ஙனே வருகின்றன?
உணர்வுகளின் ஊற்று நம்கையில் இல்லை, ஒருவேளை அவற்றிற்கு
நாம் பதிலாய்ச் செயல்படுவது மட்டும் நம்கையிலோ?
உணர்வன்றி அவற்றிற்கு நம் பதில்களே வாழ்க்கையோ...
இருக்கலாம்! அப்படித்தான் இருக்கவேண்டும்.
உணர்வுகளுக்கு நம் பதிலாகச் செய்யும் செய்கைகளும்
எண்ணங்களால் தானே உந்தப் படுகின்றன... எனில்
இடம் பொருள் ஏவல் தருணமறிந்து எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன
அதுதான் கடவுளோ?