Wednesday, November 13, 2013

கவிதை; கையாலே தமிழ் எழுதி...

ஆயிற்றே நாட்கள் பல கையாலே தமிழெழுதி
கணினியதன் தாக்கம்தான் பிரமிப்பாய்த்தான் இருக்கிறது!
ஈ-கலப்பை வந்தபின்னே பேனாவிற்கு முழுஓய்வு
ஆங்கிலத்தில் தட்டிடவே தானாய்த் தமிழ் வந்திடுதே!

படிவங்கள் நிரப்புவதே பெரும்பாடாய் இருக்கையிலே
முழுக்கடிதம் எழுதுவதில் முக்கல் முனகல்தான் அதிகம்
மணிக்கட்டு வலிக்கிறதே விரலெல்லாம் சொடுக்குமயம்
கையில்மட்டுமா வேதனை, மனதிலும்தான்!

நினைத்தபடி மாற்றிடவும் எழுதிக்கொண்டே அழித்திடவும்
வெட்டிடவும் ஒட்டிடவும் கையோடே அனுப்பிடவும்
உடனடி பதிலும்தான் பெற்றிடவும் பழகியபின்
தொடுவோமா அந்த பாழாய்ப்போன பேனாவை?!

எத்தனையோ சங்கதிகள் சரித்திரமாய்ப் போனபின்னே
மைக்கூடும் பேனாவும் எத்தனை நாள் தாங்கிவிடும்
காலத்தின் வேகத்திற்கு நானும் நீயும் கூட விலக்கில்லை
விதியிதுதான் வியப்பில்லை!

எழுத்தாணி ஓலையுடன் சந்தித்த சரித்திரமே
பேனாவும் பேப்பருமே பின்னாளில் அடைந்தனவே
கீபோர்டும் கணினியுமே எப்போது சந்திக்கும் 
இன்னிலையை எவ்வாறே!

காத்திருந்து பார்த்திருப்போம் காலமதன் கோலத்தை
கண்டிப்பாய் வந்திடுமே மாற்றம்தான் ஒருகாலம்
வேண்டினாலும் இல்லாட்டாலும் வந்துவிடும் மாற்றமதை
நிலையென்று நினைத்திடுவீர் ஏமாற்றம் என்றுமில்லை!