Thursday, February 3, 2011

ஏற்றமும் வீழ்ச்சியும்!

எட்டுவைத்தேன் வாழ்வில் ஏற்றம்தேடி, ஏழாண்டு முன்பு

அடைந்தது ஏற்றமா இறக்கமா தெரியவில்லை முடிவு!

மிஞ்சியதே குழப்பம்தான் ஆராய்ச்சி செய்யச் செய்ய...

முடிவெடுத்தேன் எடுப்பதில்லை முடிவேதும் என்று!


தீமையுமே நன்மையுமே பிறர்தந்தா வந்துவிடும்...

வெற்றியெது தோல்வியெது முடிவுசெய்வது யாரோ

நாமல்ல பிறரென்று பலரும் பிறரல்ல நாமென்று சிலரும்

நம்புகிறார் நம்பினபடி நடக்கின்றார் வேடிக்கை உலகினிலே!


இன்று பத்துவயதுப் பாலகனின் பாதி வீட்டுப்பாடம்கூட

அவன்வயதில் செய்திருக்கமாட்டாரே அவனின் வெற்றிவீரர் அப்பா

இன்றவரின் வெற்றியது மகனுக்கு நாளை தோல்வியாய்த் தெரியுமோ

நேற்றவரின் தோல்வியுமே மகனுக்கின்று ஆச்சரியம்தான்!


சூத்திரங்கள் பலவறிந்த கலாசாரக் கடலில் வாழ்ந்த்துவரும்

கீழைநாட்டு மனிதருக்கேன் மேலைநாட்டார் குறிக்கோள்!

தனமடைவது முக்கியமா மனத்தில் நிறைவடைவது சத்தியமா

குழம்புகிறார் மானிடரே விடையைத்தேடுகிறார் வெளியே!


தேடிக்கிடைக்க விடையென்ன வெளியேவா இருக்கு...

உள்ளே பார்த்து உணர்ந்து கொள்ள எங்கெ போகமுடியும்

காந்தியமும் கம்யூனிஸமும் திண்ணையில் பேசித்திளைப்போர்

களைத்தபின்னே ஓடுகிறார் வயிற்றுப் பசியை அடைக்க


தினமும் காலை ஓட்டம் பிடிக்கும் அழகுப்புள்ளி மானை

பார்த்த மனிதர் நினைவோ... “அந்தோ! பரிதாபம்”

அதைத் தின்னத்துரத்தும் கறுப்புப் புள்ளிச் சிறுத்தை

தொலைக்காட்சியிலே கண்ட மகள் கொதித்தாள் “ஆ! கொடூரம்”


நினைத்தவிடத்தில் உணவிருக்கும் மானா ரொம்பப் பாவம்,

இல்லை, பசியில் உணவுதேடி ஓடும் சிறுத்தை தானா மிகக்கொடூரம்!

எண்ணிப்பாரும் மானிடரே நன்மை தீமை எதுவோ

எல்லாமே “உன் உலகில்” மட்டுமென்று உணர்வீர்!


நான்குவேத சாரங்களும் நல்லறிஞர் சூத்திரமும்

பலமறையின் சாத்திரமும் பட்டறிவின் பகுத்தாய்வும்

‘நச்’சென்று சொல்லிவிடும் ஒருகூற்று இதுமட்டும்

தேடியெங்கும் அலையாமல் பகுந்து பாரும் உம்முளே!


பாமரனைப் பரிகசிக்கும் படித்தவர்கள் கூட்டத்தையும்

படித்தவனின் பணமிதப்பால் பொருமுகின்ற பாமரனின் குணத்தையுமே

அடிப்படையாய் உந்துகின்ற விசையென்ன வினவிடினில்

அந்தகரணம் சொல்வதெல்லாம் பயமென்னும் உணர்வொன்றே


மரணம்தப்ப ஓடுகின்ற மானின் பயமும் ஒன்றே அதை

மரிக்கவைக்கத் தவித்துவிடும் சிறுத்தைபயமும் அதுவே

ஒருவர் அழிய ஒருவர் வாழும் நியதி படைத்த இயற்கை

எந்தக் “கோர்ட்டில்” கற்றுக்கொண்டதிந்தப் பாடம் சொல்வீர்


பயத்தில் காலம் பலவாழ்ந்து பயனென்ன மகனே

அழிவு உறுதி என்றுணர்ந்தால் புள்ளிமானும் சென்றெ

“இப்போ விடு, வந்திடுவேன் அடுத்தவாரம் குண்டாய்”

என்று நன்றாய்ச் சொல்லிடாதோ சிறுத்தையிடம் தெளிவாய்


பொறுமையின்றித் தவிக்கும் மூர்க்கச் சிறுத்தை

பேச்சுவார்த்தை நடத்தும் தன்மை கொண்டால்

“காத்திடுவேன் இப்போதுன்னை நானே, பின்னே நீயாக

வந்திடுதல் நன்றே” என்றே பண்ணிடுமே பாலிடிக்ஸும் நன்றாய்


இவையெல்லாம் செய்யத்தெரிந்த மனிதன் ஏன் செய்வதில்லை

ஒன்றையுமே தெளிவாய் ... எதுவுமில்லை அவன்வசத்தில் அன்றோ

அற்புதமாய் இயற்கை நடத்தும் இச்சதுரங்க ஆட்டம் இதில்


வெட்டுவரோ வீழ்பவரோ இருவருமே காய்கள்!