சிலசமயம் தற்கொலை செய்துகொள்ளலாமா என்று
கூடத் தோன்றும். உடனே மனசு “ லூஸாடா நீ, அருமையான குழந்தைகள், மனைவி…சுற்றம் பூராவும்
உனக்குப் பாராட்டுத்தான். அப்புறம் ஏண்டா?” எனக்கூப்பாடு போடும். உடனே வெட்கமும் தன்மானமும்
என்னைச் சாப்பிட ஆரம்பிக்கும். அப்பப்போ கவிதைகூட வரும்…
எல்லாம் இருந்தும்
ஏதும் இல்லாதது போல் உணர்வு ஏனோ!
ஏதும் இல்லாதபோது எல்லாம்
இருந்ததைப் போன்ற உணர்வால் வியந்திருக்கிறேன்.
ஏனென்று புரிந்ததில்லை, இன்றும் புரிவதில்லை
ஏதும் இல்லாதது போல் உணர்வு ஏனோ!
ஏதும் இல்லாதபோது எல்லாம்
இருந்ததைப் போன்ற உணர்வால் வியந்திருக்கிறேன்.
ஏனென்று புரிந்ததில்லை, இன்றும் புரிவதில்லை
உண்மையைப் பிரதிபலிக்காத உணர்வுதான்
நிஜமென்றால், உணர்வுதான் வாழ்க்கையா!
நிஜமென்றால், உணர்வுதான் வாழ்க்கையா!
என்ன கவிஞரே, கற்பனை உலகத்தில் சஞ்சரிக்க
ஆரப்பிச்சுட்டீங்களா?” அருகில் வந்து டீ கப்பை வைத்துக்கொண்டே கேட்டாள் வசுந்தரா.
சிலரால் பரிவை அனுபவிக்க முடியாது. நானும்
அதில் சேர்த்தி போலும். நிஜமான பரிவை அனுபவிக்க முடியாது தவித்தேன். மனதில் ஏதோ கோபம்.
“என்னைப் பார்த்தா காலங்கார்த்தால கவிதை செய்யற ஆள்மாதிரியா இருக்கு. அவனவன் ஏகப்பட்ட
வேலையை வெச்சுண்டு படற அவஸ்தை புரியாம வந்துட்டா!”
“அப்பா, கொஞ்சம் பஸ் ஸ்டாப்ல ட்ராப் பண்றயா?”
அவசரத்தொனியில் கேட்டான் பெரியமகன் கேசவன். “உனக்கு ட்ரைவர் வேலைபாக்கத்தான் எனக்கு
நேரம் சரியாயிருக்கும் போலருக்கு. ப்ளான் பண்ணி சீக்கிரம் கிளம்பத் தெரியாதா உனக்கு!”
எரிந்து விழுந்தேன். முறைத்தான், பின்னர் என்ன நினைத்தானோ, ‘கோவிச்சுக்காதேப்பா, கொஞ்சம்
அவசரம். நானே போலாம்னுதான் நினைச்சேன், டயமாச்சு, ப்ளீஸ்பா!” என்று கெஞ்சினான். மனதில்
ஒரு ஈரம், இருந்தாலும் முகத்தில் லேசான கடுகடுப்போடு, “ஸரி, வந்து தொலை” என முணுமுணுத்தபடியே
அவனைக் கொண்டுவிட்டு வந்தேன்.
உள்ளே “என்ன தவம் செய்தனை…” என்று குரல்
கேட்டது. மகள் கல்யாணி பாட்டு ப்ராக்டீஸ் பண்ணிக்கொண்டிருந்தாள். அற்புதமான குரல்,
இயற்கையாகவே வரும் பாவம், மனதுக்கு இதமாய் இருக்கும் சங்கீதம். இன்றைக்கு ஏனோ எரிச்சலாயிருந்தது.
“இதென்ன நேரம் பாட்டு ப்ராக்டீஸ் பண்ண, ஒண்ணு காலைல செய்யணும், இல்ல சாயங்காலம். இப்படி
ரெண்டுங் கெட்டானா வேலை பண்ணறதே உனக்கு வழக்கமாப்போச்சு!” என இரைந்தேன்.
என்மேலேயே எனக்குக் கோபம் தாங்கவில்லை.
ஆனால் சிலசமயம் காரணம் தெரியாத இவ்வித வெளிப்பாடுகளை கட்டுப்படுத்தவே முடிவதில்லை.
ஏதோ ஹார்மோன் சமாசாரம் போலும். பெண்களுக்கு மாதம்தோறும் வருகின்ற மூட் ஸ்விங்ஸ் போல
ஆண்களுக்கும் இருப்பதாய் உணர்ந்திருக்கிறேன். அழுகை வரும், ஆனால் அழமுடியாது. நம்மை
ஏதோ ஒரு பாரம் அழுத்துவது போல் இருக்கும்.
இந்த மனது என்பது அனுபவங்களால் உருவாக்கப்
படுகிறது. ஆங்கிலத்தில் ‘கண்டிஷணிங்’ என்று சொல்லுவது போல், பலவிதமான எதிர்பார்ப்புக்களால்
உருவாகும் மனதால், சூழ்நிலைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. விளைவுகள் சற்றே
மாறுபட்டாலும் அது தடுமாறுகிறது.
நமது சுற்றம் எப்படி இருக்கவேண்டும், யார்
எதுமாதிரி நம்மிடம் நடந்துகொள்ளவேண்டும் என்பதான விதிகளை அது எழுதிக்கொண்டு, அதற்கேற்ப
உணர்வுக்கலவைகளைத் தூண்டிவிடுகிறது. இது மனிதர்களில் சற்று தூக்கலாய் இருப்பதாக எனக்குப்
படுகிறது.
“என்ன ஆச்சு!!! மறுபடியும் எங்கயோ தொலைஞ்சு
போயிட்டேளே!” என நிஜத்தை ஞாபகப்படுத்தினாள் வசுந்தரா. “எங்க தொலைஞ்சு போயிட முடியும்,
மேடம். எங்க போனாலும் டங்குனு இங்கே தானே வந்து குதிக்க வேண்டியிருக்கு…” இன்னும் எரிச்சல்
அடங்காத குரலில் பதில் வந்தது என்னிடமிருந்து.
எனக்கு என்மேலேயே கோபம் அதிகமானது. நான்
அந்த பதிலை சொல்ல விரும்பவில்லை. அப்படிப் பேசியது எனக்கே வெட்கமாயிருந்தது. ஆனாலும்
ஏன் அப்படி வார்த்தைகள் வந்து விழுகிறது என்று எனக்குப் புரியவில்லை. வசுந்தராவின்
முகத்தைப் பார்த்தவுடன் மனது வலித்தது. பாவம், எத்தனை தியாகம் செய்கிறார்கள் இந்தப்
பெண்கள்தான். பிறந்து வளர்ந்த சூழ்நிலைகள் அனைத்தையும் விட்டுவிட்டு, முற்றும் புதிய
சூழ்நிலை, மனிதர்கள் என தனது அடையாளங்களை அழித்துக் கொள்கிறார்கள். அதிலென்ன சுகமிருக்க
முடியும். என்னதான் பெண் விடுதலை பேசினாலும் அடிப்படையில் அவள் ஒரு வலியும் சுமையும்
தாங்கியாய்த்தானே இருக்கிறாள்.
“ஸாரிம்மா! என்னமோ எரிச்சல். காரணம் தெரியலை”
என்று முணுமுணுத்தேன். “ஓ ஐ லவ் யூ மை பேபி. பாப்பாக்கு என்ன ப்ராப்ளம். அம்மாட்ட சொல்லிடுமே…!”
என்று அணைத்துக்கொண்டாள். தாயாகவும் தாசியாகவும் ஒருங்கே இருப்பவள் தாரம். பெண்ணால்
அத்தனை எளிதாகத் தாய்மையை வெளிப்படுத்த முடிகிறது. இது இயற்கையின் உந்துதல். ஆணுக்கு
அது அத்தனை எளிதல்ல. வெளிப்படுத்த மட்டுமல்ல,
ஏற்றுக் கொள்வதும் கடினமாயிருக்கிறது.
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் “ஒன்றுமேயில்லாதவன்
தான் ஸந்தோஷமானவன் – எனது இளம் நண்பனுக்குக் கடிதங்கள்” படித்துக்கொண்டிருந்தேன். ஜேகே
என அன்பாய் அழைக்கப்படும் இவரைப் படிக்கையிலே எப்போதுமே ஒரு வினோதமான அனுபவம் ஏற்படுவதுண்டு.
எப்போதோ கேஸட்டில் கேட்ட அவரது ஆழமான குரல் பின்னணியில் ஒலிக்கும். செவிட்டில் ஓங்கி
அறையும் படியான உண்மையை வலிதெரியாதவாறு அல்லது வலியை ஒத்துக் கொள்ளுமாறு சொல்லிவிடுவது
இவரது வலிமை.
அடிப்படையாக அமைதியில்லாத மனதை வைத்துக்
கொண்டு வேறு எதிலும் பொருள் தேடுவது அர்த்தமற்றது என்கிறார் ஜேகே. வாழ்வை நாம் எத்தனை
வேண்டுமானாலும் அறிவுபூர்வமாக ஆராயமுடியும் ஆனால் அறுதியாக அதை உணரத்தான் செய்கிறோம்.
நமது நடவடிக்கைகளையும் வெளிப்பாடுகளையும் உணர்வுகளோடு குழப்பிக் கொள்ளாமல், உணர்வுகளை
வெறும் உணர்வுகளாய் அனுபவித்தல்தான் அமைதியோ!
வசுந்தராவின் மார்புகளுக்கிடையில் முகத்தைப்
புதைத்துக்கொண்டு சிலநிமிடங்கள் கழிந்தன. சட்டென மனதில் கவிதை ஓடியது…
தாயும்
பெண்தான் தாரமும் பெண்தான்
இருவரும்
தருவது அதே அன்புதான்
தாயிடம்
பெறுவதை இவளிடம் பெறும்போது
உணர்வுகள்
ஏனோ வெவ்வேறாய்... ஏன்!
உறவுகள் அன்பினால் மட்டுமே உருவாக்கப்
படுவதில்லை. அப்படி இருந்தால் எத்தனை அழகாய்ப் போய்விடும் இவ்வுலகம். உயிர்வாழத் தேவையாய்
இயற்கை நமக்கு பயத்தைப் படைத்திருக்கிறது. பயத்தின் உந்துதலால் தன்னறியாமல் நாம் அன்பை
அடியில் தள்ளிவிட்டு கோபமும் கள்ளமும் கலந்து உறவுகளை ஆள நினைக்கிறோம்.
எழுந்து மெதுவாய் நடந்து பால்கனியில் சென்று
அமர்ந்தேன். வெளியே லேசான சாரல் அடித்துக் கொண்டிருந்தது. ஈரப்பதமான காற்றும், மழையின்
உற்சாகமும் மனதை லேசாக்கின. மெல்லிய மழைத் துளிகளை ஆவலோடு வாங்கிக்கொண்டு சிலிர்த்துக் கொண்டிருந்த பன்னீர்ப்பூ மரம் எனக்கு ஏதோ சொல்லுவதுபோல்
தோன்றியது. கல்யாணி பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள் “மழைல மரம் செடிகளைப் பார்க்கறதே
ஒரு சுகம்தான் இல்லப்பா! அவசரமா விளையாட ஓடும் குழந்தைகளைப் போல என்ன ஒரு குதூகலம்…”
எதிரே ஒரு ஜன்னலுக்குக் கீழே மழைக்காக
ஒரு பூனையின் குடும்பம் ஒதுங்கியிருந்தது. நான்கு குட்டிகள் மழையை எட்டிப்பார்ப்பதும்
பின்னர் உள்ளே ஒதுங்கிக் கொள்வதுமாய் அலைபாய்ந்து கொண்டிருந்தன. தாய்ப்பூனை குட்டிகளையும்
வெளியே மழையையும் மாறிமாறி பார்த்துக்கொண்டிருந்தது. அதைக் காட்டினேன் கல்யாணியிடம்.
“எல்லா மிருகங்களும், மனிதன் உள்பட, இப்படி
குழந்தைகளைக் காபந்து பண்றதிலேயே பாதி வாழ்க்கை செலவழிச்சுறும் இல்லப்பா! பாவமாய் இருக்குப்பா…உங்களைப்
பார்த்தா. எங்களால என்ன செய்ய முடியும், முடியாதுன்னு தெளிவா யோசிக்கவே முடியலையே…
எப்பப்பாத்தாலும் எங்களை பாதுகாக்கணும்கிற கவலை அரிச்சிண்டிருக்கறதால, எங்களையும் வாழ்க்கையை
தேடவும் புரிஞ்சுக்கவும் விடறதில்லை நீங்க.
ஆனா இந்த பூனை கண்டிப்பா பெட்டராத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.” என்றாள்
என் பெண்ணரசி.
“என்ன, அப்பாவும் மகளும் பெரிய டிஸ்கஷன்ல
இருக்காப்ல தெரியறது” அர்த்தம் பொதிந்த புன்முறுவலோடு வசுந்தரா எங்கள் இருவருக்கும்
இடையே ஊஞ்சலில் வந்து அமர்ந்தாள். “சொல்லுவேடீ, இப்போ புரியாது, ஒனக்கும் பத்து வயசுல
ஒரு பொண்ணு இருந்த்தாப் புரியும்!” என்று சிரித்தாள்.
“அதை யாரு இப்போ இல்லேங்கறது. மனித இயல்பு
ஏன் இப்படி இருக்குங்கறதுதான் கேள்வி இப்போ!” என்ற மகளை ஆச்சரியமாகப் பார்த்தேன். குழந்தைகள்
எப்போது பெரியவர்களாகிறார்கள் என்று நமக்குத் தெரிவதே இல்லை. அகஸ்மாத்தாய் இப்படி ஏதாவது
தருணங்களில் தான் உணர்கிறோம். மனது லேசாகத்
துள்ளியது…கவிதை ஊறியது…
காரணமும் காரணியும் கேள்விகளாய் எப்பவுமே
பலரிடத்தில் பலவிதமாய் ஒருமிதமாய் எப்பவுமே
பயம்தந்த கவலை பரவலாய்த் தூண்டுமிக் கேள்விகளின்
பதில்தேடிப் பறப்பதுவே மனமென்னும் உருவகமாம்
கேள்விகளின் தன்மையாலே உணர்வுகள் வேறுபடும்
காலத்தே உணர்ந்தறிந்து இன்பமென்போம் துன்பமென்போம்
பலவிதமாய்ப் பகுத்தறிந்து எப்படித்தான் அலசினாலும்
அத்தனையும் உணர்வுகளே, வேறொன்றும் தெரியலையே!
நானும் வசுந்தராவும் ஒருவரையொருவர் பார்த்துக்
கொண்டோம். குழந்தைகளை அவர்களாகவே இருக்கவிட்டால் அவர்கள் நம்முடைய எந்தவிதமான பாதிப்பும்
இல்லாமல் அவர்களது பரிமாணங்களில் வாழ்க்கையைப் பார்க்கவும் படிக்கவும் கற்றுக்கொள்வார்கள்.
அது ஏன் நம்மால் முடிவதில்லை…
மறுபடியும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி மனதுக்குள்
பேச ஆரம்பித்தார். “எதிர்பார்ப்பு இல்லாத நிலைதான் மனிதனின் பெரிய எதிர்பார்ப்பாக இருக்க
வேண்டும். அனுபவங்களையும் உணர்வுகளையும் வெறும் அனுபவங்களாய்ப் பார்க்கும் பக்குவம்
வந்துவிட்டால் வாழ்க்கை இனிமையாக ஆகிவிடுகிறது. இனிமை என்றால் பெரியதோ நல்லதோ அல்ல,
நாம் நாமாகவே இருக்கும் நிலைமையே அது.”
“அப்பப்பா ஒரே ஃபிலாஸஃபி மயமான விவாதமா
இருக்கே. ஏய், கல்யாணி மேட்ச் என்னாச்சு, இண்டியா மிதி வாங்கியாச்சா? பாக்கலையா. சொல்லிட்டுப்
போனேனே!!” எனப் பொரிந்து கொண்டே வந்தான் கேசவன்.
“நீ அதைப்பாக்கறதே வேஸ்ட், அவளை வேற உனக்காக
பாத்து ரிபோர்ட் பண்ணச் சொல்லியிருக்கயா! ப்ரமாதம்டா! ஏதாவது ரிஸர்ச் பண்ணச்சொல்ல வேண்டியதுதானே.
உருப்படியா நேரமாவது செலவழியும். லேப்டாப்பையும் ப்ராட்பேண்டையும் பயன்படுத்தினா மாதிரி
இருக்கும்…” சிரித்துக்கொண்டே சொன்னேன்.
அப்பா, இன்னும் எத்தனைநாள் தான் இப்படி
மொக்கை போடப்போறே? அதுவும் பண்ணுவோம்பா, ஆனா எங்களோட பேஸ்ல அது நடக்கும். நல்லவேளை
இதை நீ சிரிச்சுண்டே சொல்றதால, அவ்வளவு கஷ்டமா இல்ல.” என்றான் பிள்ளை. “அப்படி சொல்லுண்ணா.
அப்பா வரவர ரொம்ப பெரிசு மாதிரி பேச ஆரம்பிச்சுட்டார். மிஞ்சிமிஞ்சிப்போனா உனக்கு ஒரு
நாப்பத்தஞ்சு வயசு இருக்குமாப்பா?” என்று தலையில் அடித்துக்கொண்டாள் மகள். சேர்ந்து
சிரித்துக்கொண்டே கல்யாணியும் கேசவனும் மேட்ச்பார்க்கச் சென்றனர். பார்க்க ஆனந்தமாயிருந்தது,
மனசு லேசாகிப் போனது.
அர்த்தமுள்ள புன்னகை ஒன்றைப் பூத்தாள்
துணைவி. அருகில் வந்து அமர்ந்தாள். இருவரும் ஊஞ்சலில் மென்மையாக ஆட ஆரம்பித்தோம். பகல்போய்
இரவுவரப்போவதை காலிங்பெல் அடித்துச் சொல்வதுபோல் ஆரஞ்சுக்கலர் சூரியன் எங்களைப்பார்த்துச்
சிரித்தது. பன்னீர் மரக்கிளையில் அமர்ந்திருந்த குரங்கு “கிகிகீகீ…” என ஏதோ சொல்லிக்கொண்டே
எங்களைப்பார்த்து பல்லைக்காட்டியது.
வசுந்தராவைப் பார்த்தேன். மனதில் லேசான
நெருடல். “ஐ லவ் யூ, மேடம்!” என்றேன். ஆதரவாக என்னை அணைத்துக் கொண்டாள்.