Thursday, December 31, 2015

வேண்டுவதும் வேண்டாததும்…

 

வந்தது புத்தாண்டு எழுந்தது கேள்வி

எது வேண்டும் எது வேண்டாம்…?

 

எது குறை எது நிறையென்று

விளங்காத நிலை வேண்டாம்

எது மிகை எதுவில்லையினும்

சமநிலை தெரியும் திறன் வேண்டும்

 

வாட்டமில்லா நிலை வேண்டாம்,

எளிதில் மீண்டுவரும் முறையும் திறனும் வேண்டும்

பிழையில்லா நிலை வேண்டாம்

அதனின்று பிழைத்து வரும் மனம் வேண்டும்

அதைப்போக்க மேலும் பிழைசெய்யும் குணம்வேண்டும்

 

விழல் வேண்டாம் எதிலும்

நிழல் வேண்டும் மனதில் வலிவந்தால்

செயலில் சுயம் வேண்டும் நலம் வேண்டும்

சிறிதும் சுயநலம் வேண்டவே வேண்டாம்

 

அன்பில் பண்பில் மிகைவேண்டும்

கோபம் சீற்றம் நிலையில் மிகவேண்டாம்

அறிதல் மிகைவேண்டாம் புரிதல் மிகவேண்டும்

பாழாய்ப்போன ஆசை மிகை வேண்டாம்

பதமாய் அதனை ஆள்வது மிகவேண்டும்

 

எதுவேண்டும் எதுவேண்டாம் என்று

அறியும் திறன் வேண்டும் இந்தப் புத்தாண்டில்

உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

வாழ்த்துக்கள்!

 

g. desikamani (mani)

founder & ceo

M   +91 95000 28611

   mentor-learning         W    mentor.in       

   MentorLearning          

 

 

மற்றுமோர் ஆண்டு, புத்தாண்டாகுமோ?

மற்றுமோர் ஆண்டு, புத்தாண்டாகுமோ?

எவ்வகையாம் எவ்வழியில்

அது முக்கியமன்றோ…

 

அது நம்கையில் அன்றோ…

 

வாழ்த்துக்கள்!

 

Friday, December 25, 2015

காக்கா முட்டை

பள்ளிக்குச் செல்லமுடியாப் பேதைகள் ரயில்பாதையில்
தினம் பொறுக்கும் திருட்டுக் கரி...
விற்றால் தான் சோறே...கறியை விடுங்கள்!

மேலே பாலத்தில் காரில் பைக்கில் செல்லும்
மேட்டுக்குடி மூக்கைப் பொத்தும் சாக்கடையே
இவர்களின் தாய்மடியாம் கூவம் ஆறு!
ஒருவேளைக் கஞ்சிக்கு லோட்டா தட்டும்
கும்பலுக்கு அருகில் கட்டுகிறான் பிட்சாகடையை

சிறையில் வாழும் தகப்பன்; வேலைச் சிறையில்
வதங்கும் தாயின் வேதனை
மருமகள் பாதுகாப்பில் மாமியார் அவளது பாதுகாப்பாய்
இவர்க்கிடையே `அப்பாகூட வேண்டாம்...,
பிட்சா வேண்டும்` எனும் சிறுவர்கள்

ஆசை யாரை விட்டது...
வாழ்க்கையின் உந்து சக்தியன்றோ...!
எனக்குச் சிறியதாயிருப்பது இச்சிறுவர்களுக்கு
இமாலயமாய் இருக்கிறது.

ஆசையாய் பாட்டி சுட்ட தோசை பிட்சாவுக்கு ஈடில்லை
அதில் நூல்நூலாய் வரவில்லை`யென்று
காறித்துப்புகிறான் சிறுவன்
`கெட்டுப்போனாத் தாண்டா அப்படி வரும்`
சப்பைக்கட்டு கட்டும் பாட்டியைத் தள்ளிவிட்டு
ஒடும் இச்சிறுவர்கள்.. வாழ்வின் இயல்பு

`யோவ், ஒரு குவார்ட்டர் எடுத்ததுக்கு எவ்வளவுய்யா
அடிப்பே` எனப் பாவக்கணக்குப் போடும் திருடர் கூட்டம்
பிட்சா வாங்க வந்தவனை `குப்பத்துப் பையன்` என
விரட்டும் காவலாளி... அவனும் `டூட்டி` முடிந்து
திரும்பப் போவது `குப்பத்து` வீட்டுக்குத்தான்.

ஆடைக்கும் காசுக்கும் இருக்கும் மதிப்பு
மனிதத்துக்கு இருந்தால்...!

வாழ்க்கை வாழத்தான்...
மேட்டிலும் இனிக்கும் பள்ளத்திலும் அது சாத்தியமே
அனுபவம் தானே வாழ்க்கை!

தேவைக்கும் ஆசைக்கும் வித்தியாசம் தெரியா
இச்சிறுவர்கள் அவதிப்படுகிறார்கள்...
சிறுவர்கள் மட்டுமா...!

மேல்தட்டு நண்பன் வேலிவழி தரும் பிட்சாவை
ஏற்க மறுக்கும் தன்மானம்
இச்சிறுவர்களை மேன்மக்களாக்குகிறது!

திருட்டுக்கரி கிடைக்காமல் திருடவும் முடியாமல்
`மட்டையாகிக் கிடக்கும் குடிமகர்களுக்கு
போக்குவரத்து வசதி செய்யும் சிறுவர்கள்
உடனடித் தொழிலதிபர்களாகிறார்கள்!

தெருநாய்க் குட்டிக்கு `இருபத்தையாயிரம்` விலை.
விலைபோகாமல் மறுபடி தொழிலாளியாவதில்
தயக்கம் ஒன்றும் தெரியவில்லை...
ஆசை யாரை விட்டது... அதுவும் பிட்சா ஆசை!

பிட்சா கடை கண்ணாடி காட்டும்
ஒவ்வொரு `பிட்சா துண்ணும்` காட்சியும்
இவர்களை சேர்த்த பணத்தை எண்ண வைக்கிறது
ஆசையை ஆழப்படுத்துகிறது... இல்லையில்லை
உசுப்பேற்றி விடுகிறது... இலட்சியத்தை நோக்கி முன்னேறும்
இந்தப் பரட்டைத்தலை வீரர்களை!

பள்ளியும் பணமும் தரவியலாத கல்வியை
வாழ்க்கையின் இல்லாமை அள்ளித்தருகிறது
பேதைமக்களின் தேவைகளை வைத்து
பேமானிகள் செய்யும் அரசியல்...
வியாபாரிகளின் இரக்கமின்மை
இறுதியாய் எல்லாவற்றுக்கும் `தீர்வா`வது
மனிதநேயமே எனும் யதார்த்தம்.

மேல்தட்டு அடித்தட்டென வித்தியாசமில்லாது
நெஞ்சையள்ளும் அம்மாக்களின் அரவணைப்பு
பாட்டிகளின் அன்புச்சிறை, அற்புதமாய்
குழந்தைகளின் பேதமில்லா அன்பு,
`பழரச`மென்னும் அன்பர் ...
நெஞ்சைத் தைக்கிறார்கள்

மொத்தத்தில் `காக்கா முட்டை`
இயல்பு அளவைப்போல சிறியதல்ல
உணர்விலும் மனிதநேயம் சொல்வதிலும்
`டைனோசார்` முட்டை!

Friday, December 4, 2015

சிறுகதை: ஐ லவ் யூ, மேடம்…!

சிலசமயம் தற்கொலை செய்துகொள்ளலாமா என்று கூடத் தோன்றும். உடனே மனசு “ லூஸாடா நீ, அருமையான குழந்தைகள், மனைவி…சுற்றம் பூராவும் உனக்குப் பாராட்டுத்தான். அப்புறம் ஏண்டா?” எனக்கூப்பாடு போடும். உடனே வெட்கமும் தன்மானமும் என்னைச் சாப்பிட ஆரம்பிக்கும். அப்பப்போ கவிதைகூட வரும்…

எல்லாம் இருந்தும்
ஏதும் இல்லாதது போல் உணர்வு ஏனோ!
ஏதும் இல்லாதபோது எல்லாம் 
இருந்ததைப் போன்ற உணர்வால் வியந்திருக்கிறேன்.
ஏனென்று புரிந்ததில்லை, இன்றும் புரிவதில்லை
உண்மையைப் பிரதிபலிக்காத உணர்வுதான்
நிஜமென்றால், உணர்வுதான் வாழ்க்கையா!
என்ன கவிஞரே, கற்பனை உலகத்தில் சஞ்சரிக்க ஆரப்பிச்சுட்டீங்களா?” அருகில் வந்து டீ கப்பை வைத்துக்கொண்டே கேட்டாள் வசுந்தரா.

சிலரால் பரிவை அனுபவிக்க முடியாது. நானும் அதில் சேர்த்தி போலும். நிஜமான பரிவை அனுபவிக்க முடியாது தவித்தேன். மனதில் ஏதோ கோபம். “என்னைப் பார்த்தா காலங்கார்த்தால கவிதை செய்யற ஆள்மாதிரியா இருக்கு. அவனவன் ஏகப்பட்ட வேலையை வெச்சுண்டு படற அவஸ்தை புரியாம வந்துட்டா!”

“அப்பா, கொஞ்சம் பஸ் ஸ்டாப்ல ட்ராப் பண்றயா?” அவசரத்தொனியில் கேட்டான் பெரியமகன் கேசவன். “உனக்கு ட்ரைவர் வேலைபாக்கத்தான் எனக்கு நேரம் சரியாயிருக்கும் போலருக்கு. ப்ளான் பண்ணி சீக்கிரம் கிளம்பத் தெரியாதா உனக்கு!” எரிந்து விழுந்தேன். முறைத்தான், பின்னர் என்ன நினைத்தானோ, ‘கோவிச்சுக்காதேப்பா, கொஞ்சம் அவசரம். நானே போலாம்னுதான் நினைச்சேன், டயமாச்சு, ப்ளீஸ்பா!” என்று கெஞ்சினான். மனதில் ஒரு ஈரம், இருந்தாலும் முகத்தில் லேசான கடுகடுப்போடு, “ஸரி, வந்து தொலை” என முணுமுணுத்தபடியே அவனைக் கொண்டுவிட்டு வந்தேன்.
உள்ளே “என்ன தவம் செய்தனை…” என்று குரல் கேட்டது. மகள் கல்யாணி பாட்டு ப்ராக்டீஸ் பண்ணிக்கொண்டிருந்தாள். அற்புதமான குரல், இயற்கையாகவே வரும் பாவம், மனதுக்கு இதமாய் இருக்கும் சங்கீதம். இன்றைக்கு ஏனோ எரிச்சலாயிருந்தது. “இதென்ன நேரம் பாட்டு ப்ராக்டீஸ் பண்ண, ஒண்ணு காலைல செய்யணும், இல்ல சாயங்காலம். இப்படி ரெண்டுங் கெட்டானா வேலை பண்ணறதே உனக்கு வழக்கமாப்போச்சு!” என இரைந்தேன்.

என்மேலேயே எனக்குக் கோபம் தாங்கவில்லை. ஆனால் சிலசமயம் காரணம் தெரியாத இவ்வித வெளிப்பாடுகளை கட்டுப்படுத்தவே முடிவதில்லை. ஏதோ ஹார்மோன் சமாசாரம் போலும். பெண்களுக்கு மாதம்தோறும் வருகின்ற மூட் ஸ்விங்ஸ் போல ஆண்களுக்கும் இருப்பதாய் உணர்ந்திருக்கிறேன். அழுகை வரும், ஆனால் அழமுடியாது. நம்மை ஏதோ ஒரு பாரம் அழுத்துவது போல் இருக்கும்.

இந்த மனது என்பது அனுபவங்களால் உருவாக்கப் படுகிறது. ஆங்கிலத்தில் ‘கண்டிஷணிங்’ என்று சொல்லுவது போல், பலவிதமான எதிர்பார்ப்புக்களால் உருவாகும் மனதால், சூழ்நிலைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. விளைவுகள் சற்றே மாறுபட்டாலும் அது தடுமாறுகிறது.

நமது சுற்றம் எப்படி இருக்கவேண்டும், யார் எதுமாதிரி நம்மிடம் நடந்துகொள்ளவேண்டும் என்பதான விதிகளை அது எழுதிக்கொண்டு, அதற்கேற்ப உணர்வுக்கலவைகளைத் தூண்டிவிடுகிறது. இது மனிதர்களில் சற்று தூக்கலாய் இருப்பதாக எனக்குப் படுகிறது.

“என்ன ஆச்சு!!! மறுபடியும் எங்கயோ தொலைஞ்சு போயிட்டேளே!” என நிஜத்தை ஞாபகப்படுத்தினாள் வசுந்தரா. “எங்க தொலைஞ்சு போயிட முடியும், மேடம். எங்க போனாலும் டங்குனு இங்கே தானே வந்து குதிக்க வேண்டியிருக்கு…” இன்னும் எரிச்சல் அடங்காத குரலில் பதில் வந்தது என்னிடமிருந்து.

எனக்கு என்மேலேயே கோபம் அதிகமானது. நான் அந்த பதிலை சொல்ல விரும்பவில்லை. அப்படிப் பேசியது எனக்கே வெட்கமாயிருந்தது. ஆனாலும் ஏன் அப்படி வார்த்தைகள் வந்து விழுகிறது என்று எனக்குப் புரியவில்லை. வசுந்தராவின் முகத்தைப் பார்த்தவுடன் மனது வலித்தது. பாவம், எத்தனை தியாகம் செய்கிறார்கள் இந்தப் பெண்கள்தான். பிறந்து வளர்ந்த சூழ்நிலைகள் அனைத்தையும் விட்டுவிட்டு, முற்றும் புதிய சூழ்நிலை, மனிதர்கள் என தனது அடையாளங்களை அழித்துக் கொள்கிறார்கள். அதிலென்ன சுகமிருக்க முடியும். என்னதான் பெண் விடுதலை பேசினாலும் அடிப்படையில் அவள் ஒரு வலியும் சுமையும் தாங்கியாய்த்தானே இருக்கிறாள்.

“ஸாரிம்மா! என்னமோ எரிச்சல். காரணம் தெரியலை” என்று முணுமுணுத்தேன். “ஓ ஐ லவ் யூ மை பேபி. பாப்பாக்கு என்ன ப்ராப்ளம். அம்மாட்ட சொல்லிடுமே…!” என்று அணைத்துக்கொண்டாள். தாயாகவும் தாசியாகவும் ஒருங்கே இருப்பவள் தாரம். பெண்ணால் அத்தனை எளிதாகத் தாய்மையை வெளிப்படுத்த முடிகிறது. இது இயற்கையின் உந்துதல். ஆணுக்கு அது அத்தனை எளிதல்ல.  வெளிப்படுத்த மட்டுமல்ல, ஏற்றுக் கொள்வதும் கடினமாயிருக்கிறது.

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் “ஒன்றுமேயில்லாதவன் தான் ஸந்தோஷமானவன் – எனது இளம் நண்பனுக்குக் கடிதங்கள்” படித்துக்கொண்டிருந்தேன். ஜேகே என அன்பாய் அழைக்கப்படும் இவரைப் படிக்கையிலே எப்போதுமே ஒரு வினோதமான அனுபவம் ஏற்படுவதுண்டு. எப்போதோ கேஸட்டில் கேட்ட அவரது ஆழமான குரல் பின்னணியில் ஒலிக்கும். செவிட்டில் ஓங்கி அறையும் படியான உண்மையை வலிதெரியாதவாறு அல்லது வலியை ஒத்துக் கொள்ளுமாறு சொல்லிவிடுவது இவரது வலிமை.

அடிப்படையாக அமைதியில்லாத மனதை வைத்துக் கொண்டு வேறு எதிலும் பொருள் தேடுவது அர்த்தமற்றது என்கிறார் ஜேகே. வாழ்வை நாம் எத்தனை வேண்டுமானாலும் அறிவுபூர்வமாக ஆராயமுடியும் ஆனால் அறுதியாக அதை உணரத்தான் செய்கிறோம். நமது நடவடிக்கைகளையும் வெளிப்பாடுகளையும் உணர்வுகளோடு குழப்பிக் கொள்ளாமல், உணர்வுகளை வெறும் உணர்வுகளாய் அனுபவித்தல்தான் அமைதியோ!

வசுந்தராவின் மார்புகளுக்கிடையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு சிலநிமிடங்கள் கழிந்தன. சட்டென மனதில் கவிதை ஓடியது…
தாயும் பெண்தான் தாரமும் பெண்தான்
இருவரும் தருவது அதே அன்புதான்
தாயிடம் பெறுவதை இவளிடம் பெறும்போது
உணர்வுகள் ஏனோ வெவ்வேறாய்... ஏன்!

உறவுகள் அன்பினால் மட்டுமே உருவாக்கப் படுவதில்லை. அப்படி இருந்தால் எத்தனை அழகாய்ப் போய்விடும் இவ்வுலகம். உயிர்வாழத் தேவையாய் இயற்கை நமக்கு பயத்தைப் படைத்திருக்கிறது. பயத்தின் உந்துதலால் தன்னறியாமல் நாம் அன்பை அடியில் தள்ளிவிட்டு கோபமும் கள்ளமும் கலந்து உறவுகளை ஆள நினைக்கிறோம்.

எழுந்து மெதுவாய் நடந்து பால்கனியில் சென்று அமர்ந்தேன். வெளியே லேசான சாரல் அடித்துக் கொண்டிருந்தது. ஈரப்பதமான காற்றும், மழையின் உற்சாகமும் மனதை லேசாக்கின. மெல்லிய மழைத் துளிகளை ஆவலோடு வாங்கிக்கொண்டு சிலிர்த்துக்  கொண்டிருந்த பன்னீர்ப்பூ மரம் எனக்கு ஏதோ சொல்லுவதுபோல் தோன்றியது. கல்யாணி பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள் “மழைல மரம் செடிகளைப் பார்க்கறதே ஒரு சுகம்தான் இல்லப்பா! அவசரமா விளையாட ஓடும் குழந்தைகளைப் போல என்ன ஒரு குதூகலம்…”

எதிரே ஒரு ஜன்னலுக்குக் கீழே மழைக்காக ஒரு பூனையின் குடும்பம் ஒதுங்கியிருந்தது. நான்கு குட்டிகள் மழையை எட்டிப்பார்ப்பதும் பின்னர் உள்ளே ஒதுங்கிக் கொள்வதுமாய் அலைபாய்ந்து கொண்டிருந்தன. தாய்ப்பூனை குட்டிகளையும் வெளியே மழையையும் மாறிமாறி பார்த்துக்கொண்டிருந்தது. அதைக் காட்டினேன் கல்யாணியிடம்.

“எல்லா மிருகங்களும், மனிதன் உள்பட, இப்படி குழந்தைகளைக் காபந்து பண்றதிலேயே பாதி வாழ்க்கை செலவழிச்சுறும் இல்லப்பா! பாவமாய் இருக்குப்பா…உங்களைப் பார்த்தா. எங்களால என்ன செய்ய முடியும், முடியாதுன்னு தெளிவா யோசிக்கவே முடியலையே… எப்பப்பாத்தாலும் எங்களை பாதுகாக்கணும்கிற கவலை அரிச்சிண்டிருக்கறதால, எங்களையும் வாழ்க்கையை தேடவும் புரிஞ்சுக்கவும் விடறதில்லை நீங்க.  ஆனா இந்த பூனை கண்டிப்பா பெட்டராத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.” என்றாள் என் பெண்ணரசி.

“என்ன, அப்பாவும் மகளும் பெரிய டிஸ்கஷன்ல இருக்காப்ல தெரியறது” அர்த்தம் பொதிந்த புன்முறுவலோடு வசுந்தரா எங்கள் இருவருக்கும் இடையே ஊஞ்சலில் வந்து அமர்ந்தாள். “சொல்லுவேடீ, இப்போ புரியாது, ஒனக்கும் பத்து வயசுல ஒரு பொண்ணு இருந்த்தாப் புரியும்!” என்று சிரித்தாள்.

“அதை யாரு இப்போ இல்லேங்கறது. மனித இயல்பு ஏன் இப்படி இருக்குங்கறதுதான் கேள்வி இப்போ!” என்ற மகளை ஆச்சரியமாகப் பார்த்தேன். குழந்தைகள் எப்போது பெரியவர்களாகிறார்கள் என்று நமக்குத் தெரிவதே இல்லை. அகஸ்மாத்தாய் இப்படி ஏதாவது தருணங்களில் தான் உணர்கிறோம்.  மனது லேசாகத் துள்ளியது…கவிதை ஊறியது…

காரணமும் காரணியும் கேள்விகளாய் எப்பவுமே
பலரிடத்தில் பலவிதமாய் ஒருமிதமாய் எப்பவுமே
பயம்தந்த கவலை பரவலாய்த் தூண்டுமிக் கேள்விகளின்
பதில்தேடிப் பறப்பதுவே மனமென்னும் உருவகமாம்

கேள்விகளின் தன்மையாலே உணர்வுகள் வேறுபடும்
காலத்தே உணர்ந்தறிந்து இன்பமென்போம் துன்பமென்போம்
பலவிதமாய்ப் பகுத்தறிந்து எப்படித்தான் அலசினாலும்
அத்தனையும் உணர்வுகளே, வேறொன்றும் தெரியலையே!

நானும் வசுந்தராவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். குழந்தைகளை அவர்களாகவே இருக்கவிட்டால் அவர்கள் நம்முடைய எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் அவர்களது பரிமாணங்களில் வாழ்க்கையைப் பார்க்கவும் படிக்கவும் கற்றுக்கொள்வார்கள். அது ஏன் நம்மால் முடிவதில்லை…

மறுபடியும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி மனதுக்குள் பேச ஆரம்பித்தார். “எதிர்பார்ப்பு இல்லாத நிலைதான் மனிதனின் பெரிய எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும். அனுபவங்களையும் உணர்வுகளையும் வெறும் அனுபவங்களாய்ப் பார்க்கும் பக்குவம் வந்துவிட்டால் வாழ்க்கை இனிமையாக ஆகிவிடுகிறது. இனிமை என்றால் பெரியதோ நல்லதோ அல்ல, நாம் நாமாகவே இருக்கும் நிலைமையே அது.”

“அப்பப்பா ஒரே ஃபிலாஸஃபி மயமான விவாதமா இருக்கே. ஏய், கல்யாணி மேட்ச் என்னாச்சு, இண்டியா மிதி வாங்கியாச்சா? பாக்கலையா. சொல்லிட்டுப் போனேனே!!” எனப் பொரிந்து கொண்டே வந்தான் கேசவன்.

“நீ அதைப்பாக்கறதே வேஸ்ட், அவளை வேற உனக்காக பாத்து ரிபோர்ட் பண்ணச் சொல்லியிருக்கயா! ப்ரமாதம்டா! ஏதாவது ரிஸர்ச் பண்ணச்சொல்ல வேண்டியதுதானே. உருப்படியா நேரமாவது செலவழியும். லேப்டாப்பையும் ப்ராட்பேண்டையும் பயன்படுத்தினா மாதிரி இருக்கும்…” சிரித்துக்கொண்டே சொன்னேன்.

அப்பா, இன்னும் எத்தனைநாள் தான் இப்படி மொக்கை போடப்போறே? அதுவும் பண்ணுவோம்பா, ஆனா எங்களோட பேஸ்ல அது நடக்கும். நல்லவேளை இதை நீ சிரிச்சுண்டே சொல்றதால, அவ்வளவு கஷ்டமா இல்ல.” என்றான் பிள்ளை. “அப்படி சொல்லுண்ணா. அப்பா வரவர ரொம்ப பெரிசு மாதிரி பேச ஆரம்பிச்சுட்டார். மிஞ்சிமிஞ்சிப்போனா உனக்கு ஒரு நாப்பத்தஞ்சு வயசு இருக்குமாப்பா?” என்று தலையில் அடித்துக்கொண்டாள் மகள். சேர்ந்து சிரித்துக்கொண்டே கல்யாணியும் கேசவனும் மேட்ச்பார்க்கச் சென்றனர். பார்க்க ஆனந்தமாயிருந்தது, மனசு லேசாகிப் போனது.

அர்த்தமுள்ள புன்னகை ஒன்றைப் பூத்தாள் துணைவி. அருகில் வந்து அமர்ந்தாள். இருவரும் ஊஞ்சலில் மென்மையாக ஆட ஆரம்பித்தோம். பகல்போய் இரவுவரப்போவதை காலிங்பெல் அடித்துச் சொல்வதுபோல் ஆரஞ்சுக்கலர் சூரியன் எங்களைப்பார்த்துச் சிரித்தது. பன்னீர் மரக்கிளையில் அமர்ந்திருந்த குரங்கு “கிகிகீகீ…” என ஏதோ சொல்லிக்கொண்டே எங்களைப்பார்த்து பல்லைக்காட்டியது.


வசுந்தராவைப் பார்த்தேன். மனதில் லேசான நெருடல். “ஐ லவ் யூ, மேடம்!” என்றேன். ஆதரவாக என்னை அணைத்துக் கொண்டாள்.

Friday, November 20, 2015

கட்டுரை: காலத்தின் சமிக்ஞை

"சார், தொப்பையையே காணோம். என்ன சார் பண்றீங்க?! சல்மான் கான் மாதிரி ஆய்ட்டீங்க சார்" ஜனாவின் ஆரவாரம் கேட்டது.

"இந்த நக்கல் தானே வாணாங்கறது" ஒரு சம்பிரதாயமான அவையடக்கம் இருந்தாலும், அடுத்த சான்ஸ் கிடைத்தவுடனே வயிற்றை பெருமையாகத் தடவி விட்டுக்கொண்ட மனுஷத்தனம் போகலையே.

"ஷுகருக்குபதிலா ஹனி, ஒருமணி நேரத்துக்குமேல பாட்மிண்டன், ஜெனரலா சாப்பாடு குறைச்சா எல்லாம் சரியாயிடும். நீங்களும் ட்ரைபண்ணலாம்" என்ற இறுமாப்பு. காலம் நாலுநாள் முன்னால சாயங்காலம் எல்லாத்துக்கும் வைத்தது ஆப்பு!

லேசான நெஞ்செரிச்சல் இருந்தது. மதியம் சாப்பிட வீட்டில் நுழைந்தவனுக்கு ஏதோ நெருடலாகவே இருந்தது. 'ஏவ்...' என்று ஏப்பம் விட்டுக் கொண்டே இருந்தேன். சிலசமயம் சத்தமாக ஏப்பம் விடுவதில் ஒரு சுகம். ஆனால் அதையும் மீறி ஏதோ ஒரு வலி... நெஞ்சிலேயா, தோளிலேயா என்று இனம் காண முடியவில்லை. 'சரியாப் போயிடும்' என முணுமுணுத்துக் கொண்டே அதை மறந்துபோனேன்.

ஒருமணி கழித்து ஆபீஸ் போவதற்காக கீழே இறங்கும்போதும் வலி தொடர்ந்தது. என்றனாவியுள் புகுந்த இயற்கை சொன்னது, " என்னன்னு பார்த்துடப்பா!" சுமித்ராவைக் கூட அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரி போனால் அவர்களது இசிஜி மிஷின் தகராறு செய்தது. ஒருவழியாய் பார்த்து முடித்தால், ஒன்றுமில்லை என்றார்கள். மனது நம்ப மறுத்தது!

சாயங்காலம் டாக்டர் சுவாமிநாதனைப் பார்த்தபோது, அவர் என்னை சந்தேகாஸ்பதமாய்ப் பார்த்தார். "ஒண்ணும் வித்தியாசமாய்த் தெரியலையே, வேணும்னா இன்னோரு இசிஜி எடுத்துடுங்கோ. பக்கத்து லாப் முதல்மாடில இருக்கு. வேகமா ஓடி படியேறி போங்கோ. பார்க்கலாம்" என்றார். ரிப்போர்ட்டைப் பார்த்து உதட்டைப் பிதுக்கினார். " போய் ரெஸ்ட் எடுங்கோ சார். பத்துநாள் கழித்து ஒரு ட்ரெட்மில் எடுத்துப்பார்த்துடலாம்" என்றுவிட்டு கிளம்பறயா என்பதுபோல் லுக் விட்டார்.

எனக்கென்னமோ உள்ளே ஒரு நெருடல். "ஸார், தப்பா நெனச்சுக்காதீங்க. ஆனா அந்த வலி ஏன் வந்ததுன்னு தெரிஞ்சுக்கலைன்னா தூக்கம் வராதே. என்ன பண்ணலாம்!" என்று இழுத்தேன். என்னமாதிரி ஜந்துப்பா நீ என ஒரு பார்வை பார்த்துவிட்டு, " நேர போய் பாலாஜி ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆய்டுங்கோ. ஒருநாள் ஐ.சி.யூ ல வச்சு பார்த்துடலாம். சந்தேகம் தீர்ந்துடும்"
என்றார்.

ஒரு நாள் முழுவதும் அங்கே இருந்தாயிற்று. இரண்டு நாவல்கள் முடிந்தது. குறைந்த பட்சம் பத்து கதைகளுக்கான கரு கிடைத்தது அங்கே இருந்தவர்களை அப்ஸர்வ் பண்ணியதில். நம்ம சமாசாரம் தான் ஒண்ணும் தெளிவாகலை. "போதுமா? இப்போ வீட்டுக்குப் போறீங்களா" என்ற சுவாமிநாதனிடம் "ஏதாவது கன்ஃபர்மேட்டரி டெஸ்ட் இல்லையா?!" என்றேன்.

"இந்த இன்டர்நெட் வந்தப்பறம், டாக்டரை நம்பற பழக்கமே போயிடுத்து பத்தீங்களா" என அலுத்துக்கொண்டே என்னைப் பார்த்தார். "வேணும்னா, ஒரு ஆன் ஜியோக்ராம் எடுத்துடலாம்!"

"எப்ப போலாம் ?" என்று கேட்டவனை இப்போது நிஜமாகவே முறைத்தார். "சரி, நாளை காலை பண்ணிடலாம்" என சிரித்துக்கொண்டே வெளியே போனார். "சும்மா இல்லாத ஏதோ கிறுக்குத்தனம் பண்ணற மாதிரி இருக்குல்ல" என்று சுமித்ராவிடம் போனில் பேசும்போது சொல்லிவிட்டு தூங்கிவிட்டேன்.

மறுநாள் ஆபரேஷன் தியேட்டரில் ஆன் ஜியோக்ராம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டாக்டர் ஃப்ரெஷ்ஷாக நெற்றியில் விபூதிக்கீற்றுடன் குட்மார்னிங் சொன்னார்.  "ஹலோ டாக்டர். நான் ரெடி..." என்றவுடன் "நீர்தான் என்னமோ அம்யூஸ்மெண்ட் பார்க் போறமாதிரி தயாரா இருக்கீரே..!" என்ற நக்கலுடன் என்னை வீல்சேரில் தள்ளிக்கொண்டு சென்றார்கள்.

தொழில்நுட்பத்தின் தாக்கம் இல்லாத துறை எது. அந்தக்காலம் மாதிரி இப்போ எங்க இருக்கு என்று அலுத்துக்கொள்ளும் பெரிசுகள் எதற்கும் இதன் அருமை புரியப்போவதில்லை. இதயத்துக்குள் இருக்கும் ஏகப்பட்ட குழாய்களில் எங்கே கொழுப்பு சென்று அடைத்துக்கொண்டிருக்கிறது என்று துல்லியமாய் கண்டுபிடிக்கும் செயல்முறைக்கு ஆன்ஜியோகிராம் என்று சொல்கிறார்கள்.

கையிலோ அல்லது தொடையிலோ உள்ள ரத்தநாளத்தின் வழியாக ஒரு மெல்லிய குழாயைச் செலுத்தி, அதன்மூலம் ஒருவகையான சாயத்தை அனுப்புகிறார்கள். எக்ஸ்ரே கதிர்கள் மூலம் உள்ளே நடப்பதெல்லாம் தெரிகிறது. சாயம் ஒரு ஸ்பெஷல் சமாசாரம். அதன்வழியே கதிர்களை அனுமதிப்பதில்லை. எனவே சாயம் போகும் இடமெல்லாம் பளிச்சென்று மேப்பில் தெரியும் நதிகளைப்போல படம் தெரிகிறது. பளிச் கோடுகளின் கனத்தை வைத்து இங்கிங்கே அடைப்பிருக்கிறது என்று தெளிவாகிறது.

"பார்க்கலாமா, டாக்டர்?!" என்ற என்னைப் பார்த்து "அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை. கண்ணை மூடுங்கோ. அஞ்சு நிமிடத்தில் முடிஞ்சுடும்" என்று என் வாயை மூடிவிட்டார். கண்ணை மூடி உணர்வுகளின் மேல் ஃபோகஸ் செய்ய முற்பட்டேன். ஏதோ குத்தியதுபோல் இருந்தது, நெஞ்சில் ஒரு மிதமான சூடு பரவியதுபோல் இருந்தது. "ஆச்சு, முடிந்தது. பத்துநிமிடத்தில் ரிசல்ட் தெரிஞ்சுடும். வெயிட் பண்ணுங்கோ...!" என்று வெளியே தள்ளி விட்டனர்.

 ஶ்ரீராம் சிரித்துக்கொண்டே "வா ஆபீஸர். அடைப்பிருக்கான்னு இப்போ தெரிஞ்சுடும்" என்று கேலி செய்தான். அவனோடு பேசிக்கொண்டிருக்கையில், டாக்டர் வந்தார். "ப்ரொசீஜர் சக்ஸஸ்ஃபுல்லா இருந்தது. ரிசல்ட்தான் சரியில்லை, ஒரு ப்ளாக் இருக்கு மெயின் ஆர்டரியில. அதிகமில்லை 90% தான். நீ சொன்னது சரியாப்போச்சுய்யா. நல்லவேளை வந்து பார்த்துட்டோம். பெருமாள் இருக்காரய்யா...!" என்றார்.

"அப்போ அடுத்தவேலையைப் பார்க்கவேண்டியதுதான். ஆன்ஜியோப்ளாஸ்டி பண்ணி ஒரு ஸ்டெண்டைப் போட்டுடவேண்டியதுதான்!" என்ற என்னை வினோதமாகப் பார்த்தனர் மருத்துவரும் செவிலியரும். "இனிமே நீ ஸ்டெண்ட்மேன்..." என்று என்னைக் கிண்டல் செய்த ஶ்ரீராமையும் சுமித்ராவையும் பார்த்து மெலிதாக மிரண்டனர். அடுத்த மூன்றாவது நாள் செய்துமுடிப்பதாய் முடிவுசெய்து அங்கிருந்து கிளம்பி ஆஸ்பத்திரி சென்றோம்.

அதன்பின்னர் சுலபமாய் வேலைகள் முடிந்து, இரண்டாவது வாரம் பேட்மிண்டன் விளையாடத் துவங்கிவிட்டேன். இந்த மருத்துவ முன்னேற்றமும், ஆயுள் மற்றும் சுகாதாரக் காப்பீடு வசதிகளும் வாழ்வை நிஜமாகவே நீளமாக்கிக் கொண்டுதான் செல்கின்றன.

ஆனால்... இதையெல்லாம் மீறி, அன்று என்னை ஆன் ஜியோகிராம் செய்யவைத்த சக்தி எது. அதுதான் காலத்தின் சமிக்ஞையோ! நமக்கெல்லாம் அதை சரியாய்ப் படிக்கத் தெரிந்திருக்கிறதா...? தெரியலையேப்பா!





சிறுகதை; பொய்

“அம்மா…ஆ ஆ ஆ” என்று அலறிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் ராகவ். வழக்கமாக அவன் மாலையில் ஸ்கூல் விட்டு வரும் நேரம்தான். எப்போதும் பெல்லை அடித்துவிட்டு காத்திருப்பான். அம்மா வந்து திறந்தவுடன் அவளை சட்டைகூட செய்யாமல் உள்ளே போவான்.

இன்னைக்கு அவனுக்கு என்ன ஆச்சோ என நினைத்துக்கொண்டு “ஏண்டா இப்படிக் கத்தறே! என்ன ஆச்சு” எனக்கேட்டுக்கொண்டே அரைத்தூக்கத்தில் பெட்ரூமை விட்டு வெளியே வந்தாள் அமுதா. “கை வலிக்குதும்மா. கதவைத்திறக்க இவ்வளவு நேரமா?! நாலரைமணிக்கு என்ன தூக்கம் வேண்டிக் கிடக்கு?” என ஆர்ப்பரித்தான்.

“சரி, இப்போ என்ன ஆச்சுன்னு அமர்க்களம் பண்ணறே… எப்படி அடிபட்டதுன்னு சொல்லு” எனக்கேட்டுக்கொண்டே அவன் கையைப்பிடித்து சோதித்தாள் அமுதா. “அதெல்லாம் எதுக்கு உனக்கு, முதல்ல எங்கூட டாக்டரைப் பார்க்க வா” என அதிகாரம் செய்தான். அவன் போட்ட சத்தத்தில் ராமண்ணா எழுந்து வந்தார். “ நீ இன்னும் கடைக்குப் போகலையாப்பா” என்று உடனே பம்மினான் ராகவ்.

“அப்பாவை பார்த்ததும் குழையறே! என்னடா சமாச்சாரம்?” அமுதா தனது இன்வெஸ்டிகேஷனை தொடர்ந்தாள். “ஏதோ பிரச்சினை மாதிரி இருக்கே. உண்மையைச் சொல்லிடு!” “அது ஒண்ணுமில்லைம்மா. ஸ்கூல் பாத்ரூம்ல வழுக்கிடுத்து, கையை ஊனி விழுந்தேன் அதனால இருக்கும்…” என்று முனகிக்கொண்டே  அவள் கண்களைத் தவிர்த்தான் ராகவ்.

“இவன் மூஞ்சியே சரியில்லையே. சொல்ற தொனியப் பார்த்தாலே தெரியுது வேற ஏதோ காரணம்னு…எதுலயுமே உண்மை இல்லை. கொஞ்சமாவது உண்மையா படிச்சேன்னா இப்படியா மார்க் வாங்குவே. என்ன வேலை பண்ணிக் கையை உடைச்சுண்டு வந்துருக்கானோ? எதுக்கும் தயாரா இரு அமுதா. நாளைக்கு ஸ்கூல்லேந்து ஓலை வந்தாலும் வரும்” கொட்டாவி விட்டுக் கொண்டே தூபம் போட்டார் ராமண்ணா.
“அப்பா, கொஞ்சம் சும்மா இருக்கியா. உங்க டார்ச்சர் தாங்கமுடியல! நான் எதை சொன்னாலும் இப்படி நம்பிக்கையே இல்லாம பேசறீங்களே, ஏம்பா இப்படி?” என பதிலுக்குக் குரலை உயர்த்தினான் பிள்ளையாண்டான்.

“ஆமாண்டா, நாங்கதான் உன்னை தினம் டார்ச்சர் பண்றோம். எங்களுக்கு அதில ஒரு சுகம் கிடைக்குது பாரு!” என அலுத்துக்கொண்டார் தந்தை. இந்திய நகரங்களில் தினப்படி நடக்கும் வளர்ந்தபிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான வாக்குவாதம் அரங்கேறிக்கொண்டிருந்தது அந்த வீட்டில்.

“உடுப்பதற்கும் உணவுக்கும் பெரும்பாடு பட்டகாலங்களில் கூட இல்லாத வேதனைகள் இந்தியக் குடும்பங்களில் இப்போது பார்க்க முடிகிறது. இல்லாமையினால் வந்த துன்பங்களை விட அதிகம் இருப்பதனால் வருபவையை சமாளிக்க முடியாமல் இன்றைய தலைமுறைப் பெற்றோர்கள் திணறுகின்றனர்” என தாடி வைத்த கிழவர் ஒருவர் என்.டி.டிவியில் பினாத்திக் கொண்டிருந்தார்.

ராமண்ணாவுக்கு சிரிப்பு வந்தது. பெருமூச்சு விட்டுக்கொண்டே ராகவை டாக்டரிடம் கூட்டிக்கொண்டு செல்வதற்காக கார் சாவியை தேட ஆரம்பித்தார்.

அடுத்தநாள்  காலையில் அமுதாவின் அலுப்புக்களுக்கு மத்தியில் ராகவ் ஸ்கூலுக்கு தயாராகிச் சென்று விட்டான். “அந்த மாவுக்கட்டுக்கு மேல இவனோட கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் எழுதப்போற கமெண்ட்ஸ் என்னவாயிருக்கும்கிற ஆர்வத்தைப் பாரு!!” என்று புலம்பிக் கொண்டே அமுதா டாக்டருக்கு போன் செய்தாள்.

ராகவைப் பரிசோதித்து கட்டுப்போட்ட எலும்புமுறிவு சிகிச்சை நிபுணர் அவளை மறுநாள் போன்செய்யச் சொன்னபோது எதற்காக இருக்கும் என்ற கவலை மனதில் ஓடிக்கொண்டிருந்தது.  இப்போது அவரிடம் பேசியபிறகு அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

 “ நேத்தே சொல்லணும்னு நினைச்சேன், எக்ஸ்ரேயைப் பார்த்தவுடனே தெரிஞ்சுருச்சு. ஓங்க பையன் கீழேயெல்லாம் விழலை. தானே கையை சுவரில் அடித்துக்கொண்டிருக்கிறான். அவனால கோபத்தை மேனேஜ் பண்ண முடியலை. என்ன பிரச்சினைன்னு கவனிங்க…கை உடைஞ்சா கொஞ்சநாள்ல சரியாகிடும். மனசு உடைஞ்சுட்டா அப்பறம் வாழ்க்கையே வேஸ்டாகிடுமில்லையா?”

டாக்டர் போனை வைத்தபிறகு அமுதாவின் நெஞ்சம் கனத்தது. ராமண்ணாவிடம் சொன்னால் அவர் குதிப்பார். ராகவிடம் எப்படி ரியாக்ட் பண்ணுவாரோ என்ற கவலை. என்ன செய்வது என்ற தெளிவில்லாமல் தவித்தாள்.

குழந்தைகளோடு இருப்பதற்காகவே தன்னுடைய ஆசைகள் குறிக்கோள்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவர்களுக்காகவே வாழ்ந்தபின்னும் பையன் அவளிடமே பொய் சொல்லுகிறானே எனும் வெறுப்பு வேறு. வாழ்க்கையில் தான் ஃபெயிலாகிவிட்டதாய் உணர்ந்தாள்.  கொஞ்ச நேர உளைச்சலுக்குப் பின் ஸ்கூலுக்கு போய் ராகவின் க்ளாஸ் டீச்சரிடம் விசாரிக்கலாம் என்று முடிவுசெய்தாள்.

ஸ்டாஃப் ரூமுக்குப் போய் டீச்சரைப் பார்க்கலாம் என்று போனவள் உள்ளே நுழையக்கூட விடாமல் உரத்த குரலில் வரவேற்றது சரஸ்வதி டீச்சரின் குரல். “வாங்க மேடம்! என்ன பிள்ளை வளர்த்திருக்கீங்க. இன்னிக்கு கையை உடைச்சுண்ட மாதிரி வேற ஏதாவது செஞ்சுட்டிருந்தான்னா எங்களுக்கு தானே பிரச்சினை. ஏன் மேடம் இந்த மாதிரி எங்க உயிரை வாங்குறீங்க?!” என்று படபடத்தாள் டீச்சர். ஆறுதல் வேண்டாம், இந்தமாதிரி கோபத்தைக் காட்டாமலாவது இருக்கலாமே என்ற ஆதங்கத்தை சமாளித்து ஒருவழியாக டீச்சரிடம் பேசிவிட்டு குழப்பமாய் வெளியே வந்தா   ள் அமுதா.

ஸ்டாஃப் ரூமிலிருந்து வெளிகேட்டிற்கு போகும் வழியில் கேண்டீனை தாண்டிப் போனவளின் கால்களை பழக்கமான குரல்கள் கட்டிப்போட்டன.

“எவனோ உன்னை என்கூட லிங்க் பண்ணி பேசினா அது உண்மையாய்டுமா. அதுக்காக நீ உன் கையை சுவத்துல அடிச்சு உடைச்சுப்பயா? சரி, அதை விடு. உங்க அம்மாகிட்டகூட உண்மையை சொல்லமுடியாத அளவுக்கு கோழையாய்ட்டயா, ராகவ்! அவ்வளவுதான் நம்ம ஃப்ரெண்ட்ஷிப்போட வேல்யூவாடா” குரல் கம்ம கேட்டாள் ஆராதனா, ராகவுடைய வகுப்பில் படிக்கும் தோழி.

“உன்னோட ஃபீலிங்  புரியுது, ஆராதனா. ஆனா, பத்து வருஷமா நான் என்ன சொன்னாலும் அதை கிண்டலும் கேலியும் பண்ற பேரண்ட்ஸ்கிட்ட எப்படி பேசறதுன்னே தெரியல. “

“நான் சரியா படிக்கல, ஆவரேஜ் ஸ்டூடண்ட் அப்படிங்கற காரணத்துக்காக இந்த டீச்சர் தான் என்னை மதிக்கலைன்னா என்னோட பேரண்ட்ஸும் அப்படித்தானே இருக்காங்க. அவங்ககிட்ட நான் ஏதாவது பொய் சொல்லித்தானே எனக்கு மதிப்பு கூட்டிக்க வேண்டியிருக்கு. அப்படியே பழகிப் போச்சு! அவங்களுக்காக பொய் சொல்லிச் சொல்லி எனக்கே எம்மேல ஒரு மரியாதையே இல்ல.”

“ சாப்பாடு போட்டு வசதிகள் பண்ணிக்குடுத்து படிக்க அனுப்பிச்சா மட்டும் போதுமா, என்னோட குறைகளோட என்னை அக்செப்ட் பண்ணிக்காத வரைக்கும், என்னை மாதிரிப் பசங்களுக்கு, பேரண்ட்ஸ் கிட்ட பொய் சொல்றதை அவாய்ட் பண்ணமுடியும்னு தோணலை!”

“எனக்கு மட்டும் இப்படியெல்லாம் பண்ணணும்னு ஆசையா என்ன. நம்ம குடும்பங்கள்ள குழந்தைகள் உண்மை சொல்லணும்னு எதிர்பார்க்கிறாங்களே தவிர, உண்மை சொன்னா அவங்க குடுக்கிற ரியாக்‌ஷனுக்கு பயந்து எந்த குழந்தையும் பொய்தான் சொல்லக் கத்துக்கும்!”

வருத்தம் தோய்ந்த குரலில் ஆனால் முதிர்ச்சியுடன் ராகவ் பேசியதைக் கேட்ட அமுதா அதிர்ந்து நின்றாள். அமுதா ஏன் இவ்வளவு நேரமா வரலை என்ற கவலையில் உள்ளே வந்த ராமண்ணாவின் கண்கள் கலங்கியிருந்தன.


வழக்கமாக பையனின் மார்க்குகளைப் பற்றி மட்டும் யோசித்து வெட்கப்படும் இருவரும், அவன் கற்றுத்தந்த பாடத்தை நினைத்து பெருமைப்பட்டுக்கொண்டே காரில் ஏறினர்.

Tuesday, November 17, 2015

கவிதை: புத்தி எப்பத்தான் வருமோ...!

ஆநெய் உண்டு அகந்தையில் வாழ்வருக்கு
பூநெய் கொண்டுசேர்க்கையால் உண்டிபடைக்க உதவும் தேனீ
பானை நிறைந்து தருமே
தேனை தித்திப்பாய் தெம்புதர

ஏனை உயிரெல்லாம் எம்மில் குறைவல்ல
யானை எறும்பு எல்லாம் சமமென்று
வீணாய்ப் போன மானுடர் மனங்களில்
ஏனாய் இந்த இறைவன் விதிக்கவில்லையோ...!

காணா உருவத்தைக் கண்டதுபோல் வரையும்
நாணா மனிதனின் கற்பனையும் அவனருளே
கோணா மனங்கொண்டு தேடும் மாந்தருக்கு
வேணாம், எதுவும் வேணாம் எனும் மனந்தருவான் அவனே...!

சத்தத்தைச் சந்தையாய்ச் செய்துவிட்டு
சாகசம் செய்ததாய் உணரும் எனக்கு
பொருளை முதலென்று அனுபவித்தால் மட்டுமே
அருளை அடைவேனென்று எப்பத்தான் புரியுமோ...!

வாளால் எம்மை அறுப்பவன்மேல்
மீளாக் காதல் எங்ஙனே கொள்வேம் என
மாளா வியப்புக் கொண்ட எனக்கு
பாளாய்ப் போன புத்தி எப்பத்தான் வருமோ...!