நரைகூடிக் கிழப்பருவமெய்தினும் நாள்பட்ட நட்பு
மறுபடித் தளிரும்போது அளவிலா ஆனந்தம்
எண்ணிப்பார்த்தால் வினோதமான உணர்வுகள்
அமைந்ததும் தொடர்ந்ததும் விட்டதும் நடந்ததே
தெரியவில்லை; ஆரியக்கூத்து முடிந்து காரியத்தில்
கண்வைக்கும் காலங்கள் அனைவருக்கும் விதியோ!
மாறும் காலங்கள் தோன்றும் புதிய உறவுகள்
நட்பில் உருவாகும் தூரங்கள் நிஜத்திலும் மனத்திலும்!
ஏற்படுதல் தவறன்றி வெறும் இயற்கைதானோ....
நட்பென்பது பகிர்தலா புரிதலா விட்டுக்கொடுத்தலா;
எதுவாயினும் மனதில் இறுக்கமில்லா நிலையென்பது
உண்மை; அவ்வப்போ தோன்றும் இறுக்கமும் மாயையன்றோ!
இலக்கின்றித் தோன்றும் நட்புக்கள் காலத்தே
பாலங்களாய் ஏணிகளாய் வளர்ச்சிக்கு வித்தாவது
பெருமைதான்; அதுதான் இயல்பான வடிவமைப்போ
நட்புக்கள் வளர்ச்சிக்கு வித்தாவது போய்
வளர்ச்சியின் தேவையே நாள்பட்ட நட்புக்களை
மலரச் செய்வது இணைய உலகத்தின் விந்தை!
பருவங்கள் எதுவாயினும் நட்பில் உணர்வுக்குக்
குறையில்லை; நேரமும் வாய்ப்பும் இன்றித் தற்காலிகமாய்
செயலிழக்கும் நட்புகளுக்கு இணையம் ஒரு சஞ்சீவிதான்!
No comments:
Post a Comment