Thursday, July 17, 2008

அப்பா ஒரு வரி வடிவம்

வக்கீல் சிகாமணியும் ஆண்டாளுப் பாட்டியும் பெற்ற பேறு
வில்லிபுத்தூர் வீரனாய் அவதாரம்
ஒற்றைக்காலணாவிற்காக செய்த சாகசங்கள்
பிச்சம்மாப் பாட்டியின் விளக்கெண்ணை கண்டு ஓட்டம்

குருஞான சம்பந்தர் பள்ளியில் படிப்பைமிஞ்சிய சேட்டையும்
திருமலை வாத்தியார் உற்சாகத்தில் கிரிக்கெட் விளையாட்டும்
பள்ளிமுடியும் முன்னே படிப்பு கசந்து வேலை தேடல்
படிக்காமல் ஏன் தேடினாயென தமையனொடு மனக்கசப்பு

பேச்சுக்கள் ஏராளமெனினும் நிஜம்தெரிந்த நடத்தை
பிறவியில் ஊறிய போராட்ட குணமும் கோபமும்
பிறர் கடினம் பொறுக்காது உடன் தீர்வுகாணத் துடித்தல்
தன்வாழ்வில் எந்நிலையாயினும் எளிதாய் நேர்காணும் மனப்பாங்கு

பிரச்சினை எதுவாயினும் தீர்வுக்கு ஒரே வழி “காமன் சென்ஸ்”
எல்லாமே முடியும் துணிந்து முயன்றால் என அசையா நம்பிக்கை
திசைதெரியா மனிதருக்கு எப்போதும் அறிவுரை “வாயிலிருக்கு வழி”
பிறர் பிரச்சினையில் அயராத் தலையீடு ஈட்டிய தன்கஷ்டங்கள்

மூவொன்பது வயதில் இன்ப எல்லைகள் வாழ்வில் இயற்கை
இவருக்கு வாய்த்த இன்னல்களை சமாளித்தது அதிசயம்
எண்ணம் முழுதும் நன்மையே நிறைந்திருந்தால் எவ்வகையிலாவது
நன்மைபயக்கும் என்பது வாழ்க்கைத்துணையில் நிஜமானது

அவரிருந்த நிலையில் பிறமக்கள் வேலைபார்த்து வாழ்வதுவே
கடினமென்றிருக்க இவர் வியாபரம் துவங்கியது பிரமிப்பு
துவங்கியது வீழ்ந்துவிட துவளாமல் முயன்றது மேலும் உன்னதம்
பெற்றவரின் தைரியத்தில் எமக்கெல்லாம் பெருமை பாடம்

அன்னை அன்புசெலுத்துவது ஒருவழியென்றால் அவரது தனிவழி
எண்ணாமல் துணிந்த கருமங்கள் துயரம்தந்தபோதும் சிரித்தது தெளிவு
முடியாதன தவிர்த்து முடிந்தனதைப் பெரிதாக்கல் இன்றலர்ந்த மேலாண்மை
அன்றறிந்து கேலியிலும் கிண்டலிலும் அவரளித்த உற்சாகம் ஊக்கம் வியப்பு

சந்ததிகள் பெரிதாகி சந்தோஷம் பொங்கிடும் நிலைமைகளைப் பார்த்து
பேரக்குழந்தைகளோடு தானுமொருவராகி ஆட்டங்கள் ஆடுவது போய்
அமரராகி முடிந்தன ஆண்டுகள் எட்டு, இன்று நினைத்துப் பார்க்கிறோம்
அவர் அவராயில்லாதிருந்தால் நாம் நாமாயிருப்போமா இன்று.

No comments: