Tuesday, March 1, 2011

பண்புடையேனாவேனோ...

ரயில் நிலையத்தில் காத்திருந்த ஒரு ராத்திரி வேளையில்

ஏனிந்த வேதனை தேவைதானோ என்றெண்ணம்

யோசிக்கையில் தெளிவானது காத்திருத்தலே வாழ்க்கையன்றோ

உடன்கிடைப்பது எதுவென்றால் ஒன்றுமில்லை விடைதானே.

உடனடி ஆனந்தம் வெறும் மாயை தேவையான நேரம்சென்று

நாம் தேர்வது உண்மையான ஆனந்தம் என்கிறார் ஸ்காட் பெக்

என் செய்ய இருநிமிட நூடுல்ஸிலிருந்து முக்கியெடுக்கும் தேயிலைவரை

“உடனடி” நம்வாழ்வில் ஐக்கியமாகி விட்டது நிதர்சனம்

உடன் கிடைக்கா எதுவும் தூண்டுகின்ற வலியையும் உணர்வுகளையும்

சமாளிக்கப் படும்பாடு சங்கரனுக்கே சங்கடம்தான்

தோன்றியது வேண்டாம் தேவையது போதுமென்ற பக்குவம்

நம் குழந்தைகளில் காண்பது அரிதினும் அரிதாகிவிடுமோ

எண்ணங்கள் தோன்றியபின் செயல்படுத்தத் துவங்குகிறொம்

சிலரால் முடிகிறது, சிலரால் முடியவில்லை; எல்லாம்

நம்மால்தான் என்றெண்ணம் இயற்கையாய்ப் போயிற்று

அந்த எண்ணம் அக்கணத்தில் தோற்றுவித்தது யாரோ

எதுவுமே நாமல்ல விதிதானே என்பது விதண்டாவாதம்

இன்றைக்கு முடியாததை நாளைக்கு முடியச்செய்வது

முயற்சியும் பயிற்சியுமன்றோ; அதுவும் இயற்கைதானே

ஒழுக்கமென்று விளிக்கின்றார் பெரியோர், எளிதல்ல, உண்மை!

No comments: