"சார், தொப்பையையே காணோம். என்ன சார் பண்றீங்க?! சல்மான் கான் மாதிரி ஆய்ட்டீங்க சார்" ஜனாவின் ஆரவாரம் கேட்டது.
"இந்த நக்கல் தானே வாணாங்கறது" ஒரு சம்பிரதாயமான அவையடக்கம் இருந்தாலும், அடுத்த சான்ஸ் கிடைத்தவுடனே வயிற்றை பெருமையாகத் தடவி விட்டுக்கொண்ட மனுஷத்தனம் போகலையே.
"ஷுகருக்குபதிலா ஹனி, ஒருமணி நேரத்துக்குமேல பாட்மிண்டன், ஜெனரலா சாப்பாடு குறைச்சா எல்லாம் சரியாயிடும். நீங்களும் ட்ரைபண்ணலாம்" என்ற இறுமாப்பு. காலம் நாலுநாள் முன்னால சாயங்காலம் எல்லாத்துக்கும் வைத்தது ஆப்பு!
லேசான நெஞ்செரிச்சல் இருந்தது. மதியம் சாப்பிட வீட்டில் நுழைந்தவனுக்கு ஏதோ நெருடலாகவே இருந்தது. 'ஏவ்...' என்று ஏப்பம் விட்டுக் கொண்டே இருந்தேன். சிலசமயம் சத்தமாக ஏப்பம் விடுவதில் ஒரு சுகம். ஆனால் அதையும் மீறி ஏதோ ஒரு வலி... நெஞ்சிலேயா, தோளிலேயா என்று இனம் காண முடியவில்லை. 'சரியாப் போயிடும்' என முணுமுணுத்துக் கொண்டே அதை மறந்துபோனேன்.
ஒருமணி கழித்து ஆபீஸ் போவதற்காக கீழே இறங்கும்போதும் வலி தொடர்ந்தது. என்றனாவியுள் புகுந்த இயற்கை சொன்னது, " என்னன்னு பார்த்துடப்பா!" சுமித்ராவைக் கூட அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரி போனால் அவர்களது இசிஜி மிஷின் தகராறு செய்தது. ஒருவழியாய் பார்த்து முடித்தால், ஒன்றுமில்லை என்றார்கள். மனது நம்ப மறுத்தது!
சாயங்காலம் டாக்டர் சுவாமிநாதனைப் பார்த்தபோது, அவர் என்னை சந்தேகாஸ்பதமாய்ப் பார்த்தார். "ஒண்ணும் வித்தியாசமாய்த் தெரியலையே, வேணும்னா இன்னோரு இசிஜி எடுத்துடுங்கோ. பக்கத்து லாப் முதல்மாடில இருக்கு. வேகமா ஓடி படியேறி போங்கோ. பார்க்கலாம்" என்றார். ரிப்போர்ட்டைப் பார்த்து உதட்டைப் பிதுக்கினார். " போய் ரெஸ்ட் எடுங்கோ சார். பத்துநாள் கழித்து ஒரு ட்ரெட்மில் எடுத்துப்பார்த்துடலாம்" என்றுவிட்டு கிளம்பறயா என்பதுபோல் லுக் விட்டார்.
எனக்கென்னமோ உள்ளே ஒரு நெருடல். "ஸார், தப்பா நெனச்சுக்காதீங்க. ஆனா அந்த வலி ஏன் வந்ததுன்னு தெரிஞ்சுக்கலைன்னா தூக்கம் வராதே. என்ன பண்ணலாம்!" என்று இழுத்தேன். என்னமாதிரி ஜந்துப்பா நீ என ஒரு பார்வை பார்த்துவிட்டு, " நேர போய் பாலாஜி ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆய்டுங்கோ. ஒருநாள் ஐ.சி.யூ ல வச்சு பார்த்துடலாம். சந்தேகம் தீர்ந்துடும்"
என்றார்.
ஒரு நாள் முழுவதும் அங்கே இருந்தாயிற்று. இரண்டு நாவல்கள் முடிந்தது. குறைந்த பட்சம் பத்து கதைகளுக்கான கரு கிடைத்தது அங்கே இருந்தவர்களை அப்ஸர்வ் பண்ணியதில். நம்ம சமாசாரம் தான் ஒண்ணும் தெளிவாகலை. "போதுமா? இப்போ வீட்டுக்குப் போறீங்களா" என்ற சுவாமிநாதனிடம் "ஏதாவது கன்ஃபர்மேட்டரி டெஸ்ட் இல்லையா?!" என்றேன்.
"இந்த இன்டர்நெட் வந்தப்பறம், டாக்டரை நம்பற பழக்கமே போயிடுத்து பத்தீங்களா" என அலுத்துக்கொண்டே என்னைப் பார்த்தார். "வேணும்னா, ஒரு ஆன் ஜியோக்ராம் எடுத்துடலாம்!"
"எப்ப போலாம் ?" என்று கேட்டவனை இப்போது நிஜமாகவே முறைத்தார். "சரி, நாளை காலை பண்ணிடலாம்" என சிரித்துக்கொண்டே வெளியே போனார். "சும்மா இல்லாத ஏதோ கிறுக்குத்தனம் பண்ணற மாதிரி இருக்குல்ல" என்று சுமித்ராவிடம் போனில் பேசும்போது சொல்லிவிட்டு தூங்கிவிட்டேன்.
மறுநாள் ஆபரேஷன் தியேட்டரில் ஆன் ஜியோக்ராம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டாக்டர் ஃப்ரெஷ்ஷாக நெற்றியில் விபூதிக்கீற்றுடன் குட்மார்னிங் சொன்னார். "ஹலோ டாக்டர். நான் ரெடி..." என்றவுடன் "நீர்தான் என்னமோ அம்யூஸ்மெண்ட் பார்க் போறமாதிரி தயாரா இருக்கீரே..!" என்ற நக்கலுடன் என்னை வீல்சேரில் தள்ளிக்கொண்டு சென்றார்கள்.
தொழில்நுட்பத்தின் தாக்கம் இல்லாத துறை எது. அந்தக்காலம் மாதிரி இப்போ எங்க இருக்கு என்று அலுத்துக்கொள்ளும் பெரிசுகள் எதற்கும் இதன் அருமை புரியப்போவதில்லை. இதயத்துக்குள் இருக்கும் ஏகப்பட்ட குழாய்களில் எங்கே கொழுப்பு சென்று அடைத்துக்கொண்டிருக்கிறது என்று துல்லியமாய் கண்டுபிடிக்கும் செயல்முறைக்கு ஆன்ஜியோகிராம் என்று சொல்கிறார்கள்.
கையிலோ அல்லது தொடையிலோ உள்ள ரத்தநாளத்தின் வழியாக ஒரு மெல்லிய குழாயைச் செலுத்தி, அதன்மூலம் ஒருவகையான சாயத்தை அனுப்புகிறார்கள். எக்ஸ்ரே கதிர்கள் மூலம் உள்ளே நடப்பதெல்லாம் தெரிகிறது. சாயம் ஒரு ஸ்பெஷல் சமாசாரம். அதன்வழியே கதிர்களை அனுமதிப்பதில்லை. எனவே சாயம் போகும் இடமெல்லாம் பளிச்சென்று மேப்பில் தெரியும் நதிகளைப்போல படம் தெரிகிறது. பளிச் கோடுகளின் கனத்தை வைத்து இங்கிங்கே அடைப்பிருக்கிறது என்று தெளிவாகிறது.
"பார்க்கலாமா, டாக்டர்?!" என்ற என்னைப் பார்த்து "அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை. கண்ணை மூடுங்கோ. அஞ்சு நிமிடத்தில் முடிஞ்சுடும்" என்று என் வாயை மூடிவிட்டார். கண்ணை மூடி உணர்வுகளின் மேல் ஃபோகஸ் செய்ய முற்பட்டேன். ஏதோ குத்தியதுபோல் இருந்தது, நெஞ்சில் ஒரு மிதமான சூடு பரவியதுபோல் இருந்தது. "ஆச்சு, முடிந்தது. பத்துநிமிடத்தில் ரிசல்ட் தெரிஞ்சுடும். வெயிட் பண்ணுங்கோ...!" என்று வெளியே தள்ளி விட்டனர்.
ஶ்ரீராம் சிரித்துக்கொண்டே "வா ஆபீஸர். அடைப்பிருக்கான்னு இப்போ தெரிஞ்சுடும்" என்று கேலி செய்தான். அவனோடு பேசிக்கொண்டிருக்கையில், டாக்டர் வந்தார். "ப்ரொசீஜர் சக்ஸஸ்ஃபுல்லா இருந்தது. ரிசல்ட்தான் சரியில்லை, ஒரு ப்ளாக் இருக்கு மெயின் ஆர்டரியில. அதிகமில்லை 90% தான். நீ சொன்னது சரியாப்போச்சுய்யா. நல்லவேளை வந்து பார்த்துட்டோம். பெருமாள் இருக்காரய்யா...!" என்றார்.
"அப்போ அடுத்தவேலையைப் பார்க்கவேண்டியதுதான். ஆன்ஜியோப்ளாஸ்டி பண்ணி ஒரு ஸ்டெண்டைப் போட்டுடவேண்டியதுதான்!" என்ற என்னை வினோதமாகப் பார்த்தனர் மருத்துவரும் செவிலியரும். "இனிமே நீ ஸ்டெண்ட்மேன்..." என்று என்னைக் கிண்டல் செய்த ஶ்ரீராமையும் சுமித்ராவையும் பார்த்து மெலிதாக மிரண்டனர். அடுத்த மூன்றாவது நாள் செய்துமுடிப்பதாய் முடிவுசெய்து அங்கிருந்து கிளம்பி ஆஸ்பத்திரி சென்றோம்.
அதன்பின்னர் சுலபமாய் வேலைகள் முடிந்து, இரண்டாவது வாரம் பேட்மிண்டன் விளையாடத் துவங்கிவிட்டேன். இந்த மருத்துவ முன்னேற்றமும், ஆயுள் மற்றும் சுகாதாரக் காப்பீடு வசதிகளும் வாழ்வை நிஜமாகவே நீளமாக்கிக் கொண்டுதான் செல்கின்றன.
ஆனால்... இதையெல்லாம் மீறி, அன்று என்னை ஆன் ஜியோகிராம் செய்யவைத்த சக்தி எது. அதுதான் காலத்தின் சமிக்ஞையோ! நமக்கெல்லாம் அதை சரியாய்ப் படிக்கத் தெரிந்திருக்கிறதா...? தெரியலையேப்பா!
No comments:
Post a Comment