Friday, November 20, 2015

சிறுகதை; பொய்

“அம்மா…ஆ ஆ ஆ” என்று அலறிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் ராகவ். வழக்கமாக அவன் மாலையில் ஸ்கூல் விட்டு வரும் நேரம்தான். எப்போதும் பெல்லை அடித்துவிட்டு காத்திருப்பான். அம்மா வந்து திறந்தவுடன் அவளை சட்டைகூட செய்யாமல் உள்ளே போவான்.

இன்னைக்கு அவனுக்கு என்ன ஆச்சோ என நினைத்துக்கொண்டு “ஏண்டா இப்படிக் கத்தறே! என்ன ஆச்சு” எனக்கேட்டுக்கொண்டே அரைத்தூக்கத்தில் பெட்ரூமை விட்டு வெளியே வந்தாள் அமுதா. “கை வலிக்குதும்மா. கதவைத்திறக்க இவ்வளவு நேரமா?! நாலரைமணிக்கு என்ன தூக்கம் வேண்டிக் கிடக்கு?” என ஆர்ப்பரித்தான்.

“சரி, இப்போ என்ன ஆச்சுன்னு அமர்க்களம் பண்ணறே… எப்படி அடிபட்டதுன்னு சொல்லு” எனக்கேட்டுக்கொண்டே அவன் கையைப்பிடித்து சோதித்தாள் அமுதா. “அதெல்லாம் எதுக்கு உனக்கு, முதல்ல எங்கூட டாக்டரைப் பார்க்க வா” என அதிகாரம் செய்தான். அவன் போட்ட சத்தத்தில் ராமண்ணா எழுந்து வந்தார். “ நீ இன்னும் கடைக்குப் போகலையாப்பா” என்று உடனே பம்மினான் ராகவ்.

“அப்பாவை பார்த்ததும் குழையறே! என்னடா சமாச்சாரம்?” அமுதா தனது இன்வெஸ்டிகேஷனை தொடர்ந்தாள். “ஏதோ பிரச்சினை மாதிரி இருக்கே. உண்மையைச் சொல்லிடு!” “அது ஒண்ணுமில்லைம்மா. ஸ்கூல் பாத்ரூம்ல வழுக்கிடுத்து, கையை ஊனி விழுந்தேன் அதனால இருக்கும்…” என்று முனகிக்கொண்டே  அவள் கண்களைத் தவிர்த்தான் ராகவ்.

“இவன் மூஞ்சியே சரியில்லையே. சொல்ற தொனியப் பார்த்தாலே தெரியுது வேற ஏதோ காரணம்னு…எதுலயுமே உண்மை இல்லை. கொஞ்சமாவது உண்மையா படிச்சேன்னா இப்படியா மார்க் வாங்குவே. என்ன வேலை பண்ணிக் கையை உடைச்சுண்டு வந்துருக்கானோ? எதுக்கும் தயாரா இரு அமுதா. நாளைக்கு ஸ்கூல்லேந்து ஓலை வந்தாலும் வரும்” கொட்டாவி விட்டுக் கொண்டே தூபம் போட்டார் ராமண்ணா.
“அப்பா, கொஞ்சம் சும்மா இருக்கியா. உங்க டார்ச்சர் தாங்கமுடியல! நான் எதை சொன்னாலும் இப்படி நம்பிக்கையே இல்லாம பேசறீங்களே, ஏம்பா இப்படி?” என பதிலுக்குக் குரலை உயர்த்தினான் பிள்ளையாண்டான்.

“ஆமாண்டா, நாங்கதான் உன்னை தினம் டார்ச்சர் பண்றோம். எங்களுக்கு அதில ஒரு சுகம் கிடைக்குது பாரு!” என அலுத்துக்கொண்டார் தந்தை. இந்திய நகரங்களில் தினப்படி நடக்கும் வளர்ந்தபிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான வாக்குவாதம் அரங்கேறிக்கொண்டிருந்தது அந்த வீட்டில்.

“உடுப்பதற்கும் உணவுக்கும் பெரும்பாடு பட்டகாலங்களில் கூட இல்லாத வேதனைகள் இந்தியக் குடும்பங்களில் இப்போது பார்க்க முடிகிறது. இல்லாமையினால் வந்த துன்பங்களை விட அதிகம் இருப்பதனால் வருபவையை சமாளிக்க முடியாமல் இன்றைய தலைமுறைப் பெற்றோர்கள் திணறுகின்றனர்” என தாடி வைத்த கிழவர் ஒருவர் என்.டி.டிவியில் பினாத்திக் கொண்டிருந்தார்.

ராமண்ணாவுக்கு சிரிப்பு வந்தது. பெருமூச்சு விட்டுக்கொண்டே ராகவை டாக்டரிடம் கூட்டிக்கொண்டு செல்வதற்காக கார் சாவியை தேட ஆரம்பித்தார்.

அடுத்தநாள்  காலையில் அமுதாவின் அலுப்புக்களுக்கு மத்தியில் ராகவ் ஸ்கூலுக்கு தயாராகிச் சென்று விட்டான். “அந்த மாவுக்கட்டுக்கு மேல இவனோட கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் எழுதப்போற கமெண்ட்ஸ் என்னவாயிருக்கும்கிற ஆர்வத்தைப் பாரு!!” என்று புலம்பிக் கொண்டே அமுதா டாக்டருக்கு போன் செய்தாள்.

ராகவைப் பரிசோதித்து கட்டுப்போட்ட எலும்புமுறிவு சிகிச்சை நிபுணர் அவளை மறுநாள் போன்செய்யச் சொன்னபோது எதற்காக இருக்கும் என்ற கவலை மனதில் ஓடிக்கொண்டிருந்தது.  இப்போது அவரிடம் பேசியபிறகு அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

 “ நேத்தே சொல்லணும்னு நினைச்சேன், எக்ஸ்ரேயைப் பார்த்தவுடனே தெரிஞ்சுருச்சு. ஓங்க பையன் கீழேயெல்லாம் விழலை. தானே கையை சுவரில் அடித்துக்கொண்டிருக்கிறான். அவனால கோபத்தை மேனேஜ் பண்ண முடியலை. என்ன பிரச்சினைன்னு கவனிங்க…கை உடைஞ்சா கொஞ்சநாள்ல சரியாகிடும். மனசு உடைஞ்சுட்டா அப்பறம் வாழ்க்கையே வேஸ்டாகிடுமில்லையா?”

டாக்டர் போனை வைத்தபிறகு அமுதாவின் நெஞ்சம் கனத்தது. ராமண்ணாவிடம் சொன்னால் அவர் குதிப்பார். ராகவிடம் எப்படி ரியாக்ட் பண்ணுவாரோ என்ற கவலை. என்ன செய்வது என்ற தெளிவில்லாமல் தவித்தாள்.

குழந்தைகளோடு இருப்பதற்காகவே தன்னுடைய ஆசைகள் குறிக்கோள்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவர்களுக்காகவே வாழ்ந்தபின்னும் பையன் அவளிடமே பொய் சொல்லுகிறானே எனும் வெறுப்பு வேறு. வாழ்க்கையில் தான் ஃபெயிலாகிவிட்டதாய் உணர்ந்தாள்.  கொஞ்ச நேர உளைச்சலுக்குப் பின் ஸ்கூலுக்கு போய் ராகவின் க்ளாஸ் டீச்சரிடம் விசாரிக்கலாம் என்று முடிவுசெய்தாள்.

ஸ்டாஃப் ரூமுக்குப் போய் டீச்சரைப் பார்க்கலாம் என்று போனவள் உள்ளே நுழையக்கூட விடாமல் உரத்த குரலில் வரவேற்றது சரஸ்வதி டீச்சரின் குரல். “வாங்க மேடம்! என்ன பிள்ளை வளர்த்திருக்கீங்க. இன்னிக்கு கையை உடைச்சுண்ட மாதிரி வேற ஏதாவது செஞ்சுட்டிருந்தான்னா எங்களுக்கு தானே பிரச்சினை. ஏன் மேடம் இந்த மாதிரி எங்க உயிரை வாங்குறீங்க?!” என்று படபடத்தாள் டீச்சர். ஆறுதல் வேண்டாம், இந்தமாதிரி கோபத்தைக் காட்டாமலாவது இருக்கலாமே என்ற ஆதங்கத்தை சமாளித்து ஒருவழியாக டீச்சரிடம் பேசிவிட்டு குழப்பமாய் வெளியே வந்தா   ள் அமுதா.

ஸ்டாஃப் ரூமிலிருந்து வெளிகேட்டிற்கு போகும் வழியில் கேண்டீனை தாண்டிப் போனவளின் கால்களை பழக்கமான குரல்கள் கட்டிப்போட்டன.

“எவனோ உன்னை என்கூட லிங்க் பண்ணி பேசினா அது உண்மையாய்டுமா. அதுக்காக நீ உன் கையை சுவத்துல அடிச்சு உடைச்சுப்பயா? சரி, அதை விடு. உங்க அம்மாகிட்டகூட உண்மையை சொல்லமுடியாத அளவுக்கு கோழையாய்ட்டயா, ராகவ்! அவ்வளவுதான் நம்ம ஃப்ரெண்ட்ஷிப்போட வேல்யூவாடா” குரல் கம்ம கேட்டாள் ஆராதனா, ராகவுடைய வகுப்பில் படிக்கும் தோழி.

“உன்னோட ஃபீலிங்  புரியுது, ஆராதனா. ஆனா, பத்து வருஷமா நான் என்ன சொன்னாலும் அதை கிண்டலும் கேலியும் பண்ற பேரண்ட்ஸ்கிட்ட எப்படி பேசறதுன்னே தெரியல. “

“நான் சரியா படிக்கல, ஆவரேஜ் ஸ்டூடண்ட் அப்படிங்கற காரணத்துக்காக இந்த டீச்சர் தான் என்னை மதிக்கலைன்னா என்னோட பேரண்ட்ஸும் அப்படித்தானே இருக்காங்க. அவங்ககிட்ட நான் ஏதாவது பொய் சொல்லித்தானே எனக்கு மதிப்பு கூட்டிக்க வேண்டியிருக்கு. அப்படியே பழகிப் போச்சு! அவங்களுக்காக பொய் சொல்லிச் சொல்லி எனக்கே எம்மேல ஒரு மரியாதையே இல்ல.”

“ சாப்பாடு போட்டு வசதிகள் பண்ணிக்குடுத்து படிக்க அனுப்பிச்சா மட்டும் போதுமா, என்னோட குறைகளோட என்னை அக்செப்ட் பண்ணிக்காத வரைக்கும், என்னை மாதிரிப் பசங்களுக்கு, பேரண்ட்ஸ் கிட்ட பொய் சொல்றதை அவாய்ட் பண்ணமுடியும்னு தோணலை!”

“எனக்கு மட்டும் இப்படியெல்லாம் பண்ணணும்னு ஆசையா என்ன. நம்ம குடும்பங்கள்ள குழந்தைகள் உண்மை சொல்லணும்னு எதிர்பார்க்கிறாங்களே தவிர, உண்மை சொன்னா அவங்க குடுக்கிற ரியாக்‌ஷனுக்கு பயந்து எந்த குழந்தையும் பொய்தான் சொல்லக் கத்துக்கும்!”

வருத்தம் தோய்ந்த குரலில் ஆனால் முதிர்ச்சியுடன் ராகவ் பேசியதைக் கேட்ட அமுதா அதிர்ந்து நின்றாள். அமுதா ஏன் இவ்வளவு நேரமா வரலை என்ற கவலையில் உள்ளே வந்த ராமண்ணாவின் கண்கள் கலங்கியிருந்தன.


வழக்கமாக பையனின் மார்க்குகளைப் பற்றி மட்டும் யோசித்து வெட்கப்படும் இருவரும், அவன் கற்றுத்தந்த பாடத்தை நினைத்து பெருமைப்பட்டுக்கொண்டே காரில் ஏறினர்.

No comments: